பியூட்டி : சினிமா விமர்சனம்


பியூட்டி : சினிமா விமர்சனம்
x
நடிகர்: ரிஷி நடிகை: கரீனா ஷா  டைரக்ஷன்: கோ ஆனந்த் சிவா இசை: இலக்கியன் ஒளிப்பதிவு : ஆர்.தீபக் குமார்

அழகு என்பது முகத்தில் அல்ல அகத்தில் காட்டும் அன்பில்தான் உள்ளது என்ற கருவை வைத்து உருவாகியிருக்கிறது பியூட்டி.

கிராமத்தில் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வசதியோடு வாழும் நிலக்கிழாரின் மனைவி இறந்து போக அழகான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அந்த பெண்ணின் அரக்க குணத்தினால் நிம்மதி இழக்கிறார்.

இதனால் தனது மகன் ரிஷியிடம் அழகு இல்லாத பெண்ணை மணந்து கொள் என்று சொல்லி விட்டு இறந்து போகிறார். வளர்ந்ததும் ரிஷி வங்கியில் வேலை பார்க்கிறார். அழகாக இருப்பவர்களை வெறுக்கிறார். தந்தை விருப்பப்படியே தீவிபத்தினால் முகத்தில் தழும்புகளோடு அழகில்லாமல் இருக்கும் கரினா ஷாவை காதலிக்கிறார். இருவரும் திருமணத்துக்கும் தயாராகிறார்கள்.

ரிஷி வெளியூர் சென்ற நேரம் ஒரு மருத்துவர் கரீனா ஷாவுக்கு அறுவை சிகிச்சை செய்து முகத்தை அழகாக மாற்றி விடுகிறார். அதிர்ச்சியாகும் ரிஷி பழையபடி கரினா ஷா முகத்தை அலங்கோலமாக்கி திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பதும் இதனால் நடக்கும் பிரச்சினைகள் என்ன என்பதும் மீதி கதை..

ரிஷி தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் வருகிறார். மகன் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பர்தா அணிந்து வரும் நாயகியிடம் கோபப்படுவது. பிறகு காரணம் தெரிந்து மன்னிப்பு கேட்பது, கடன் கேட்டு வரும் ஏழை பெண்ணுக்கு உதவுவது என்று நல்ல மனதுக்காரராக கதாபாத்திரத்தில் வலுசேர்க்கிறார்.

அழகை காட்டி அத்துமீறும் பெண்ணை குடும்பத்தில் மாட்டிவிட்டு பழிவாங்குவது, இளைஞனை விபத்தில் சிக்க வைத்து கையை சிதைப்பது, காதலி முகத்தை கோரமாக்க சதி செய்வது என்று இன்னொரு சைக்கோ வில்லன் முகமும் காட்டி அதிர வைக்கிறார்.

நாயகி கரீனா ஷா அழகான காதலியாக வருகிறார். சிங்கமுத்து, காயா கபூர், மருத்துவராக வரும் ஆனந்தன், ஆதேஷ் பாலா ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதியில் வேகம். உளவியல் பாதிப்பை மையமாக வைத்து வித்தியாசமான கதையை விறுவிறுப்பாக நகர்த்தி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் ஆனந்த சிவா. கிளைமாக்ஸ் சுவாரஸ்யமான திருப்பம்

இலக்கியனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.ஆர்.தீபக் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.


Next Story