காரோட்டியின் காதலி: சினிமா விமர்சனம்


காரோட்டியின் காதலி: சினிமா விமர்சனம்
x
நடிகர்: குமரவேல் நடிகை: ஜானகி தேவி  டைரக்ஷன்: சிவா ஆர் இசை: என்.ஆர்.ரகுநந்தன் ஒளிப்பதிவு : விந்தன் ஸ்டாலின்

முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு ஏழையின் கதை ”காரோட்டியின் காதலி”.

சிங்கப்பூரில் தொழில் செய்து அவ்வப்போது ஊருக்கு வரும் தனது முதலாளிக்கு விசுவாசமாக இருந்து கார் ஓட்டுகிறார் குமரவேல். காரை முதலாளியாகவே பார்ப்பதால் மற்றவர்களுக்கு ஓட்டுவது இல்லை. முதலாளி வரும்போதுதான் வேலை, சம்பளம் கிடைக்கிறது. அந்த சொற்ப சம்பளம் போதும் என்ற திருப்தியில் இருக்கிறார். இதனால் குடும்பம் வருமானம் இன்றி தள்ளாடுகிறது. முதலாளியிடம் உதவி கேட்கும்படி மனைவி நிர்ப்பந்தித்தும் குமரவேல் மறுக்கிறார். குடும்ப வறுமை அறிந்து சைக்கிளில் வேலைக்கு செல்லும் மூத்த மகன் கீழே விழுந்து அடிபட்டு காயமாகிறான்.

இந்த சூழலில் ஊருக்கு வரும் முதலாளி, குமரவேல் காரில் ஒரு பெட்டியை தவற விட்டு செல்கிறார். அதை திறந்து பார்க்கும் குமரவேலுக்கு அதிர்ச்சி. உள்ளே கட்டு கட்டாக பணம் இருக்கிறது. பணத்தை பார்த்து குமரவேல் மனம் தடுமாறியதா? அவர் செய்த காரியங்கள் என்ன என்பது மீதி கதை. குமரவேல் வைராக்கியமான விசுவாசமான கார் டிரைவர் கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கஷ்டங்களை தனக்குள் புதைத்து வெளியில் இயல்பான முகம் காட்டி உள்ளார்.

வறுமைக்கும் சுய கவுரவத்துக்கும் இடையிலான மன போராட்டத்தை கச்சிதமாக வெளியிடுகிறார். ஏழை டிரைவரின் மனைவியாக வரும் ஜானகி தேவியின் பேச்சிலும் உடல் மொழியிலும் யதார்த்தம். முதலாளியாக வரும் சிவா ஆர்., ராஜானி, ஆதர்ஷ் ஆனந்தன், ஆகாஷ், அஞ்சனா, மூர்த்தி ஆகியோர் கதாபாத்திரங்களில் நிறைவு. காட்சிகளில் இன்னும் சுவாரஸ்யங்களை சேர்த்து இருக்கலாம். சில இடங்களில் நாடகத்தனம் தெரிகிறது.

திரைக்கதையை சினிமாத்தனம் இல்லாமல் கலைப் படைப்பாக கொடுக்க இயக்குனர் சிவா ஆர். முயன்று அதில் வென்றும் இருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவும் கச்சிதம்.


Next Story