பிஸ்தா: சினிமா விமர்சனம்


பிஸ்தா: சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஷிரிஷ் நடிகை: மிருதுளா  டைரக்ஷன்: எம். ரமேஷ் பாரதி இசை: தரன் குமார் ஒளிப்பதிவு : எம்.விஜய்

திருமணத்தில் விருப்பம் இல்லாத மணப்பெண்களை தூக்குவதை தொழிலாக செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதை.

மாப்பிள்ளை பிடிக்காமல், பெற்றோர்களின் கட்டாயம் காரணமாக வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் மணப்பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாக இருக்கிறார், ஷிரிஷ். இதற்காக அவர் ஒரு நிறுவனம் தொடங்கி, இதையே தொழிலாக செய்து வருகிறார். இதனால் அவர் பலரின் பகையை சம்பாதிக்கிறார். இந்த நிலையில் அவருக்கு மிருதுளா முரளி மீது காதல் வருகிறது. மிருதுளாவும் ஷிரிசை விரும்புகிறார்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், 'மணப்பெண்களை தூக்கும்' தொழிலை ஷிரிஷ் கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார், மிருதுளா. அந்த நிபந்தனையை ஷிரீசும் ஏற்றுக் கொள்கிறார். இங்கேதான் விதி விளையாடுகிறது. நண்பருக்காக அவர் அந்த நிபந்தனையை மீறுகிறார், இதை காரணம் காட்டி, திருமணத்தை ரத்து செய்கிறார், மிருதுளா.

அவரிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வாதாடுகிறார், ஷிரிஷ். அதற்கு ஒரேயடியாக மறுத்து விடுகிறார், மிருதுளா. செய்த வினைகள் திருப்பி அடிக்கின்றன. ஷிரிசுக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். அவருக்கு திருமணம் நடந்ததா? யாருடன் நடந்தது? என்பது மீதி கதையில் இருக்கிறது.

ஷிரிஷ் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து இருக்கிறார். பாடல் காட்சிகளில் சுறுசுறுப்பாக நடனம் ஆடுகிறார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து மணப்பெண்களை தூக்கும் விதம், சிறப்பு. மிருதுளாவுடன் காதல் இருந்தாலும், நெருக்கமான தொடுதல் இல்லை.

மிருதுளா உணர்ச்சிகளை இயல்பாக முகத்துக்கு கொண்டு வருகிறார். இவரை விட நடிப்பிலும், தோற்றத்திலும் அதிக மார்க் வாங்குகிறார், (கதாநாயகிக்கு தோழியாக வரும்) அருந்ததி நாயர்.

வசன காமெடி மூலம் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார், சதிஷ், சிரிப்புதான் வரமாட்டேன்கிறது. 'மார்க் பாபு" வாக வரும் யோகி பாபு கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். செந்திலை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.

தரன் குமார் இசையில், பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை. எம்.விஜய் ஒளிப்பதிவில், காட்சிகள் பளிச். எம். ரமேஷ் பாரதி டைரக்டு செய்திருக்கிறார். இடைவேளை வரை, கதையும், காட்சிகளும் எந்தவித கவன ஈர்ப்பும் இல்லாமல் மெதுவாக கடந்து செல்கின்றன. இடைவேளைக்குப்பின், கதையுடன் பார்வையாளர்களை ஒன்ற வைத்து விடுகிறார், டைரக்டர்.

பேய்களுக்கும், பிரமாண்டங்களுக்கும் மத்தியில், இப்படியும் ஒரு படம்.


Next Story