மஞ்சக் குருவி ; சினிமா விமர்சனம்


மஞ்சக் குருவி ; சினிமா விமர்சனம்
x
நடிகர்: விஷ்வா நடிகை: நீரஜா  டைரக்ஷன்: அரங்கன் சின்னத்தம்பி இசை: சவுந்தர்யன் ஒளிப்பதிவு : வேல்

கும்பகோணத்தில் ரவுடியாக வலம் வருபவர் ராஜநாயகம். இவரிடம் தொழில் கற்றுக்கொண்ட கிஷோர் இன்னொரு பெரிய ரவுடியாக உருவெடுக்கிறார். இருவருக்கும் பகை மூழ்கிறது. இதில் ராஜநாயகம் மீது கொலை பழிசுமத்தி ஜெயிலுக்கு அனுப்புகிறார் கிஷோர். இவரது தங்கை நீரஜா. அண்ணனின் ரவுடித்தனம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி சித்தாப்பா வீட்டில் தங்குகிறார்.

நீரஜா மீது அதே ஊரைச்சேர்ந்த விஷ்வாவுக்கு காதல் வருகிறது. விஷ்வாவை நீரஜாவுக்கும் பிடிக்கிறது. ஆனால் அண்ணனால் விஷ்வா உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று கருதி காதலை ஏற்க மறுக்கிறார். அண்ணன் ரவுடித்தனத்தை விட்டு திருந்த வேண்டும் என்பது நீரஜா ஆசை. அவரது ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காக கிஷோரை திருத்தி நல்வழிப்படுத்த விஷ்வா களம் இறங்குகிறார். கிஷோர் திருந்தினாரா? காதல் என்ன ஆனது என்பது மீதி கதை.

பொதுவுடமை சித்தாந்தம் பேசி கதையின் நாயகனாக வருகிறார் விஷ்வா. ஏழைகளுக்கு உதவிகள் செய்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார். நாயகியிடம் காதலை வெளிப்படுத்துவதிலும் கண்ணியம்.

ஊரையே தன் ரவுடித்தனத்தால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கிஷோர் மிரட்டல் வில்லன். பிற்பகுதியில் மனம் மாறி இன்னொரு முகம் காட்டுகிறார்.

நாயகி நீரஜாவுக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி உள்ளார். காதல் உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார். ராஜநாயகம் இன்னொரு ஆக்ரோஷமான வில்லனாக வருகிறார். கஞ்சா கருப்பு காமெடி ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார். கோலி சோடா பாண்டி, சுஜாதா சிவகுமார், சுப்புராஜ் ஆகியோரும் உள்ளனர்.

சில காட்சிகளில் நாடகத்தனம் தெரிகிறது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். காதல், நட்பு, கொலை, பழிவாங்கல் என்ற கலவையில் காட்சிகளை நகர்த்தி உள்ளார் இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி.

சவுந்தர்யன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வேல் ஒளிப்பதிவும் சிறப்பு.


Next Story