எனக்கு எண்டே கிடையாது - சினிமா விமர்சனம்


எனக்கு எண்டே கிடையாது - சினிமா விமர்சனம்
x
நடிகர்: விக்ரம் ரமேஷ் நடிகை: சுவயம் சித்தா  டைரக்ஷன்: விக்ரம் ரமேஷ் இசை: காலாசரண் ஒளிப்பதிவு : தளபதி ரத்னம்

விக்ரம் ரமேஷ்நாயகன் விக்ரம் ரமேஷ் கால் டாக்ஸி ஓட்டுகிறார். ஒரு நாள் இரவு நாயகி சுவயம் சித்தாவை கேளிக்கை விடுதியிலிருந்து பிக்கப் செய்து வீட்டில் கொண்டு விடுகிறார்.

அப்போது விக்ரம் ரமேஷை வற்புறுத்தி வீட்டுக்குள் அழைத்து செல்கிறார் சுவயம் சித்தா. இருவரும் மது அருந்துகிறார்கள்.

போதையில் இரவு அங்கேயே தூங்கிவிடும் விக்ரம் ரமேஷ் காலையில் எழுந்து புறப்படும்போது ஒரு அறைக்குள் ஆண் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்கிறார்.

தொடர்ந்து சுவயம் சித்தாவும் மயங்கி விழுகிறார். இந்த விபரீதத்தில் இருந்து விக்ரம் ரமேஷ் தப்பிக்க நினைக்கையில் வீட்டின் கதவு திறக்க முடியாத வகையில் டிஜிட்டல் லாக் சிஸ்டத்தில் இருக்கிறது.

அப்போது அந்த வீட்டுக்குள் ஒரு திருடன் வருகிறான். தொடர்ந்து ஒரு அரசியல் வாதியும் பணத்துடன் வருகிறார். மூவரும் வெளியேற முடியாமல் வீட்டுக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.

எதிர்பாரதவிதமாக சில நிகழ்வுகளும் நடக்கிறது. சடலமாக இருந்த ஆண் யார்? சுவயம் சித்தா நிலைமை என்ன ஆனது.? வீட்டுக்குள் சிக்கியவர்கள் தப்பித்தார்களா? இல்லையா என்பது மீதி கதை.

பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் இருக்கும் விக்ரம் ரமேஷ் மிக இயல்பாக நடித்திருக்கிறார். வறுமையும் விரக்தியுமான நிலையில் இருப்பவருக்கு வசதியான வாழ்க்கை கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை தன் உடல் மொழியால் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சுவயம் சித்தா கவர்ச்சி பாவையாக வந்து ரசிகர்களை மயக்குகிறார். அரசியல்வாதியாக வரும் சிவகுமார் ராஜு, திருடனாக வரும் கார்த்திக் வெங்கட்ராமன் ஆகியோர் திரைக்கு புதியவர்களாக இருந்தாலும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளார்கள்.

படத்தின் அதிகபட்ச காட்சிகள் வீட்டுக்குள் நடந்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் அசத்தலாக படம் பிடித்துள்ளது ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் கேமரா.

காலாசரண் இசை கதை ஒரே இடத்தில் நடப்பதைப் போன்ற உணர்விலிருந்து மீட்டெடுக்கிறது. பாடல்களும் நன்று.

அற்பமான ஆசைகளுக்கு பின்னால் இருக்கும் ஆபத்தை திகில் கலந்து ரசிக்கும்படி சொல்லி திறமையான இயக்குனராக கவனம் பெறுகிறார் விக்ரம் ரமேஷ்.

கதைக்களம் ரசிக்கும்படியாக இருந்தாலும் சுவாரசியத்துக்காக கொலைக்களமாக மாறுவது நெருடல்.


Next Story