சினிமா விமர்சனம்: டூடி


சினிமா விமர்சனம்: டூடி
x
நடிகர்: கார்த்திக் மதுசூதன் நடிகை: ஷ்ரிதா சிவதாஸ்  டைரக்ஷன்: கார்த்திக் மதுசூதன்-சாம் ஆர்டிஎக்ஸ் இசை: கே.சி.பாலசாரங்கன் ஒளிப்பதிவு : மதன் சுந்தர்ராஜ்

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் காதலை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைகளம்.

கார்த்திக் மதுசூதன், ஒரு வித்தியாசமான இசை கலைஞர். மது, மாது, கிதார் இசைப்பது என ஜாலியாக இருக்கிறார். ஐந்து நிமிடத்துக்கு ஒரு பீடி புகைப்பது இவர் வழக்கம். அவருடைய பலவீனங்கள் தெரிந்த பிறகும் அவர் மீது காதல்வசப்படுகிறார், ஷ்ரிதா சிவதாஸ். தன் காதலை கார்த்திக் மதுசூதனிடம் தெரிவிக்கிறார். அவருடைய காதலை ஏற்க மறுப்பதுடன், 'கெட் அவுட்' என்று ஷ்ரிதா சிவதாசை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார், கார்த்திக் மதுசூதன்.

சில நாட்களுக்குப்பின், ஷ்ரிதா சிவதாசிடம் கார்த்திக் மதுசூதன் காதலை ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார். ஆனால் ஷ்ரிதா சிவதாஸ், "ஐந்து வருடங்களுக்கு முன்பு உன் காதலை சொல்லியிருக்கக் கூடாதா? உனக்கு முன்பு நான் ஒருவரை காதலித்து விட்டேன். அவருடன் எனக்கு திருமணம் நடக்கப் போகிறது" என்கிறார்.

அவர் சொன்னபடி ஷ்ரிதா சிவதாசுக்கும், அவருடைய முதல் காதலருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் ஷ்ரிதா சிவதாஸ் தன் தந்தையிடம், கார்த்திக் மதுசூதனை காதலிப்பதாகவும், இந்த திருமணம் வேண்டாம் என்றும் கூறுகிறார். "சரி, உன் புது காதலரை அழைத்து வா...அவருடன் பேசலாம்" என்கிறார், தந்தை. அவர் வரமாட்டார் என்கிறார், ஷ்ரிதா சிவதாஸ்.

அவருக்கு யாருடன் திருமணம் நடந்தது? என்பது கிளைமாக்ஸ்.

இந்த கதையை எழுதியிருப்பதுடன் கதாநாயகனாக நடித்தும் இருக்கிறார், கார்த்திக் மதுசூதன். இசை கலைஞர், அவருக்குள் ஒரு காதல், கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து இருக்கிறார், கார்த்திக் மதுசூதன். முதல் காதலருக்கும், இரண்டாவது காதலருக்கும் இடையே சிக்கிக் கொண்டு தவிக்கும் வேடத்தில், ஷ்ரிதா சிவதாஸ் உணர்வுப்பூர்வமாக நடித்து இருக்கிறார்.

கதாநாயகி ஷ்ரிதா சிவதாசின் பெற்றோர்களாக ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி. இவர்கள் மூலம் இந்தக்கால பெற்றோர்களின் பரிதாப நிலையை உயிரோட்டமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். டைரக்டர்கள் கார்த்திக் மதுசூதன்-சாம் ஆர்டிஎக்ஸ். வயதுக்கு ஏற்ப காதல் மாறும் என்ற கருத்தை துணிச்சலாக சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் வேகம் போதாது.


Next Story