சினிமா விமர்சனம்: கொடை


சினிமா விமர்சனம்: கொடை
x
நடிகர்: கார்த்திக் சின்கா நடிகை: அனயா  டைரக்ஷன்: ராஜ செல்வம் இசை: சுபாஷ் கவி ஒளிப்பதிவு : அர்ஜுன் கார்த்திக்

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் நாயகன் கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அப்பணத்தை அவர்கள் வழியிலேயே சென்று மீட்டெடுக்க முனைவது கொடை படத்தின் மையம்.

கொடைக்கானலில் தங்கும் விடுதி ஒன்றில் வேலை செய்து வரும் கார்த்திக் சின்கா அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு அடிக்கடி உதவிகள் செய்கிறார். அதே ஊரில் வசிக்கும் அனயாவை ஒருதலையாக காதலிக்கிறார்.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை படிக்க வைக்க பணம் தேவைப்படுகிறது. இதற்காக கார்த்திக் சின்கா நிதி திரட்டுகிறார். அந்த இல்லத்துக்கு அனயாவின் தந்தை ரூ.5 லட்சம் நன்கொடை கொடுக்கிறார்.

அந்த பணத்தை வில்லன் அஜய் ரத்தினம் கும்பல் ரூ.25 லட்சம் தருவதாக ஏமாற்றி கார்த்திக் சின்காவிடம் இருந்து பறித்து விடுகிறது. இதுபோல் மேலும் பலர் அந்த கும்பலிடம் பணத்தை இழந்து இருப்பது தெரிய வருகிறது.

மொத்த பணத்தையும் மீட்க கார்த்திக் சின்கா களம் இறங்குகிறார். பணம் கிடைத்ததா? காதல் கைகூடியதா? என்பது மீதி கதை.

படத்தில் நாயகனாக வரும் கார்த்திக் சின்கா நடிப்பு, நடன காட்சிகளில் கவர்கிறார். சண்டை காட்சிலும் வேகம். மீன்கள் எகிறி துள்ளும் குளத்தில் நடக்கும் சண்டை கவனம் பெறுகிறது.

நாயகி அனயா அமைதியாக வந்து அழகால் வசீகரிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சென்டிமென்ட் நடிப்பில் பளிச்சிடுகிறார்.

ரோபோ சங்கர் சில இடங்களில் சிரிக்க வைத்து இருக்கிறார்.

ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம் தருவதாக ஏமாற்றும் நூதன வில்லனாக அஜய்ரத்தினம் மிரட்டுகிறார். சிங்கமுத்து, போஸ் வெங்கட், மாரிமுத்து, கு.ஞானசம்பந்தம், ஆனந்த்பாபு, கே.ஆர்.விஜயா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்.

காதல், நகைச்சுவை, அதிரடி என்று காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் ராஜ செல்வம். சுபாஷ் கவியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். கொடைக்கானலை அர்ஜுன் கார்த்திக் கேமரா அழகாக படம்பிடித்து உள்ளது.


Next Story