கட்சிக்காரன்: சினிமா விமர்சனம்


கட்சிக்காரன்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: விஜித் சரவணன் நடிகை: ஸ்வேதா டாரதி  டைரக்ஷன்: ப.ஐயப்பன் இசை: ரோஷன் ஜோசப். சி.எம்.மகேந்திரா ஒளிப்பதிவு : மதன்குமார்

அரசியல் கட்சியில் தொண்டனாக இருப்பவர் விஜித் சரவணன். கட்சிக்காக ஓடி ஓடி உழைக்கிறார். மனைவியின் தாலியை அடகு வைத்தும் செலவு செய்கிறார். தேர்தலில் தனது பகுதியில் அதிக ஓட்டு வாங்கி கொடுத்து கட்சி தலைவனை வெற்றி பெறவும் வைக்கிறார். அவரது உழைப்பை பாராட்டி உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தலைவர் வாய்ப்பு கொடுக்கிறார்.

ஆனால் கடைசி நேரத்தில் எதிர்க்கட்சியிலிருந்து கட்சி மாறி வந்த ஒருவனுக்கு அந்த கவுன்சிலர் சீட் வாய்ப்பு மாற்றி கொடுக்கப்பட்டு விடுகிறது. ஏமாற்றத்தினால் உடைந்து போகும் விஜித் சரவணன் என்ன முடிவு எடுத்தார் என்பது மீதி கதை…

அப்பாவி கட்சிக்காரன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் விஜித் சரவணன். தலைவனை வெறித்தனமாக நம்புவது, போஸ்டர் ஒட்டுவது. கூட்டம் நடத்துவது என்று தொண்டன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க தலைவர் கொடுத்த பணத்தில் மக்கள் இலவச பயணம் செய்ய ஆட்டோ வாங்கி விட்டு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கவும் செய்கிறார். ஏமாற்றப்பட்ட பிறகு அவர் எடுக்கும் முடிவு விறுவிறுப்பு.

மனைவியாக வரும் ஸ்வேதா டாரதிக்கு அழகான கிராமத்து முகம். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. கட்சித் தலைவராக வரும் சிவ சேனாதிபதி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் பங்கை அனுபவ நடிப்பால் சிறப்பாக செய்துள்ளார். விஜித் சரவணன் நண்பனாக வரும் தெனாலி அரசியல் வசனங்கள் பேசி சிரிக்க வைக்கிறார்.

வசனங்களிலேயே பெரும் பகுதி கதை நகர்வது சலிப்பை தருகிறது. அரசியல் கட்சி தலைவருக்காக உழைப்பையும், பணத்தையும் கொடுக்கும் தொண்டன் ஏமாற்றப்படுவதை படம் கேள்வி கேட்கிறது. அரசியல் கதையை வித்தியாசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக கொடுத்துள்ள இயக்குனர் ப.ஐயப்பன் சமூக அக்கறையை பாராட்டலாம்.

ரோஷன் ஜோசப். சி.எம்.மகேந்திரா இசையில் பாடல்கள் கேட்கலாம். மதன்குமார் கேமரா கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது.


Next Story