கெழப்பய - சினிமா விமர்சனம்


கெழப்பய - சினிமா விமர்சனம்
x
நடிகர்: கதிரேச குமார் நடிகை: அனுதியா  டைரக்ஷன்: யாழ் குணசேகரன் இசை: கெபி ஒளிப்பதிவு : அஜித் குமார்

தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் கதிரேச குமார் பணி முடித்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பும்போது பின் தொடர்ந்து ஒரு கார் வருகிறது.

காரில் கர்ப்பிணி மற்றும் ஐந்து ஆண்கள் இருக்கிறார்கள். கார் ஓட்டுனர் வழி கேட்டு ஹாரன் கொடுக்கிறார்.

அதற்கு செவி கொடுக்காமல் கதிரேச குமார் கார் கடந்துபோகாதபடி நடு ரோட்டில் சைக்கிள் ஓட்டிச்செல்கிறார்.

இதனால் காரில் இருப்பவர்கள் இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். கடுமையாக தாக்கவும் செய்கிறார்கள்.

அடி வாங்கிய பிறகும் கதிரேச குமார் வழிவிடாமல் சைக்கிளை காருக்கு முன் நிறுத்தி தடை ஏற்படுத்துகிறார். ஏன் வழி கொடுக்கவில்லை? கதிரேச குமாருக்கும், காரில் இருப்பவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பது மீதி கதை.

படத்தின் நாயகனான கதிரேச குமார் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து படம் முழுவதும் பேசாமலே ஆகச் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஆரம்பத்தில் அவர் மீது எரிச்சல் ஏற்பட்டாலும் அவருடைய செயலுக்கு பின்னால் இருக்கும் உண்மை தெரியும்போது கருணை பிறப்பது கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றி.

துணை கதாபாத்திரங்களில் வரும் ஆனந்தராஜ், கிருஷ்ணகுமார், விஜய ரணதீரன், 'பேக்கரி' முருகன், கே.என்.ராஜேஷ், அனுதியா உள்பட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து நேர்த்தியான நடிப்பை வழங்கி கதைக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.

கார், ரோடு என சொற்ப இடத்தில் நடக்கும் கதையில் ஒளிப்பதிவாளர் அஜித் குமாரின் அதிகபட்ச உழைப்பை பார்க்க முடிகிறது.

இசையமைப்பாளர் கெபி விறுவிறுப்பான பின்னணி இசை மூலம் கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

வயது முதிர்ந்தவர் பேசாமலேயே தன் எதிர்ப்பை எப்படி காண்பிக்க முடியும் என்பதை எளிமையான திரைக்கதை மூலம் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குனர் யாழ் குணசேகரன்.

சுவாரஸ்யமான திரைக்கதையாக இருந்தாலும் வெகுஜன மக்களுக்கான நகைச்சுவை இல்லாதது பலகீனம்.


Next Story