குடிமகான்: சினிமா விமர்சனம்


குடிமகான்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: விஜய் சிவன் நடிகை: சாந்தினி  டைரக்ஷன்: பிரகாஷ் இசை: தனுஜ் மேனன் ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்

வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வேலை பார்ப்பவர் விஜய் சிவன். இவரது மனைவி சாந்தினி. தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி.

ஒரு கட்டத்தில் விஜய் சிவன் குளிர்பானம் குடித்தாலே போதை ஏறும் விநோத நோயில் சிக்குகிறார். ஒரு நாள் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும்போது தானாகவே போதை ஏறி மெஷினில் நூறு ரூபாய் வைப்பதற்கு பதிலாக ஐநூறு ரூபாய் நோட்டுகளை வைத்து விடுகிறார்.

அந்த பணம் வாடிக்கையாளர்கள் கைக்கு போய்விடுகிறது. இதனால் விஜய் சிவன் வேலை பறிபோகிறது. பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை தேடி அலைகிறார். அவருடைய முயற்சியில் என்ன மாதிரியான கலாட்டா நடக்கிறது. பணம் கிடைத்ததா? என்பது மீதி கதை.

விஜய்சிவன் அப்பாவியான குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் யதார்த்தம் மீறாமல் இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார். மது குடிக்காமலேயே போதை ஏறி அவர் செய்யும் அலப்பறைகள் ரகளை.

மனைவியிடம் பம்முவது, குழந்தையிடம் பாசம் காட்டுவது. வாடிக்கையாளர்கள் வீடுகளில் ஏறி இறங்கி ஏ.டி.எம்.மில் எடுத்த பணத்தை திருப்பி தருமாறு கெஞ்சுவது என்று எல்லா இடத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சாந்தினி குடும்ப தலைவி வேடத்தில் உணர்ச்சிகளை மொத்தமாக கொட்டி கலக்கி இருக்கிறார். குடிகார தாத்தாவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி முட்டையை உடைத்து குடிப்பது, பேரக்குழந்தையுடன் டான்ஸ் ஆடுவதும், இரண்டாம் திருமணம் செய்வது என அமர்க்களம் பண்ணியிருக்கிறார்.

குடிமகன்களுக்காக குரல் கொடுக்கும் கேரக்டரில் நாமோ நாராயணன் வழக்கம்போல் எகத்தாள நடிப்பில் அதக்களம் பண்ணும்போது தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது. ஜி.ஆர்.கதிரவன், கே.பி.ஒய் ஆனஸ்ட்ராஜ் ஆகியோரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

தனுஜ் மேனன் இசையில் 'கொக்கு கொக்கு பற பற' பாடல் துள்ளல் ரகம். மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு படத்தை சுவாரசியப்படுத்த உதவியிருக்கிறது.

குடியால் ஏற்படும் பாதிப்புகளையும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.

நாயகனின் விநோத நோயை மையமாக வைத்து குடும்பமாக பார்த்து ரசிக்கும் வகையில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கலகலப்பான படத்தைக் கொடுத்துள்ளார் டைரக்டர் பிரகாஷ்.


Next Story