குற்றம் புரிந்தால் : சினிமா விமர்சனம்


குற்றம் புரிந்தால் : சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஆதிக் பாபு நடிகை: அர்ச்சனா  டைரக்ஷன்: டிஸ்னி இசை: கே.எஸ்.மனோஜ் ஒளிப்பதிவு : கோகுல்

நாயகன் ஆதிக் பாபு தனது மாமா எம்.எஸ்.பாஸ்கர் ஆதரவில் வளர்கிறார். மாமாவின் மகள் அர்ச்சனாவும் ஆதிக் பாபுவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க எம்.எஸ்.பாஸ்கர் முடிவு செய்கிறார்.

அப்போது அந்த பயங்கரம் நடக்கிறது. மூன்று பேர் வீட்டுக்குள் புகுந்து ஆதிக் பாபுவையும் எம்.எஸ்.பாஸ்கரையும் குற்றுயிராக அடித்து போட்டு விட்டு அர்ச்சனாவை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீளும் ஆதிக் பாபு மாமாவும், தனது காதலியும் ரவுடிகள் தாக்குதலில் இறந்துபோன தகவல் அறிந்து உடைகிறார்.

போலீஸ் அதிகாரியும், அரசு மருத்துவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை அறிகிறார். கொலையாளிகளை பழிதீர்க்க என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது படம்.

நாயகன் ஆதிக் பாபுவுக்கு நடிப்பை வெளிப்படுத்தும் வலுவான கதாபாத்திரம். அதை தனது இயல்பான நடிப்பால் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். மாமா மீது அன்பு, அவரது மகள் மீதான காதல், இருவரையும் இழந்த தவிப்பு, கொலை செய்ய கூலிக்கு ரவுடியை தேடிப்போவது, கோபம் என்று அனைத்து உணர்வுகளையும் அபாரமாக வெளிப்படுத்தி உள்ளார்.

மருத்துவரை அவரது மனைவியுடன் நட்பு வைத்து வீட்டுக்குள் நுழைந்து உளவியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து பழிவாங்குவது வித்தியாசம்.

நாயகி அர்ச்சனாவின் காதல் சில்மிஷங்கள் சுவாரஸ்யம். முடிவு பரிதாபம். எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பால் கதையில் அழுத்தம் கொடுத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக மிடுக்காக வருகிறார் அபிநயா. அவர் துப்பு துலக்கும் காட்சிகள் கவனம் பெறுகின்றன. ராம்ஸ், அருள் டி.ஷங்கர், ரேணிகுண்டா நிசாந்த் போன்றோர் அவரவர் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.

கொலைகளை குரூரமாக செய்து வீடியோக்களை வெளியிடும் நாயகனை போலீஸ் தப்பிக்க விடுவதில் லாஜிக் இல்லை.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை அழுத்தமான திரைக்கதையில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் டிஸ்னி. திரில்லர் கதைக்கு கோகுல் ஒளிப்பதிவு, கே.எஸ்.மனோஜ் இசை வலுசேர்த்துள்ளது.


Next Story