"மாயோன்" சினிமா விமர்சனம்


மாயோன் சினிமா விமர்சனம்
x
நடிகர்: சிபிராஜ் நடிகை: தான்யா ரவிச்சந்திரன்  டைரக்ஷன்: கிசோர் இசை: இளையராஜா ஒளிப்பதிவு : ராம் பிரசாத்

ஒரு பழங்காலத்து கோவிலில் புதையலை தேடி செல்லும் போது ஏற்படும் அமானுஷ்ய அனுபவங்களை பற்றி கதை ”மாயோன்”.

'மாயோன் மலை' என்ற மலை கிராமத்தில் உள்ள ஒரு பழங்காலத்து கோவிலில் தங்கம், வைர நகைகள் அடங்கிய புதையல் இருப்பதாக தொல்லியல் துறைக்கு தகவல் கிடைக்கிறது. அதை கண்டுபிடிக்க அதிகாரி சிபிராஜ் தலைமையில் ஒரு குழு புறப்படுகிறது. உள்ளூரில் உள்ள சிலை கடத்தல் கும்பலின் தலைவர் ஹரீஸ் பெராடி, சிபிராஜை தனது கைக்குள் போட்டுக்கொண்டு அந்த புதையலை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.

கோவிலுக்குள் நுழையும் தொல்லியல் துறையினருக்கு அங்கே ஒரு பேய் மற்றும் ராட்சத பாம்பு இருப்பது போல் அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுகின்றன. தங்க, வைர நகைகள் விறகுகளாக மாறி காட்சி அளிக்கின்றன. சிபிராஜுக்கும், ஹரீஸ் பெராடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. தொல்லியல் துறை உயர் அதிகாரி கே.எஸ்.ரவிகுமாரை கைக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கிறார், ஹரீஸ் பெராடி. அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? புதையலை கைப்பற்றுபவர் யார்? என்பது மீதி கதை.

தொல்லியல் துறை அதிகாரியாக வரும் சிபிராஜ், சரியான தேர்வு. தான்யா ரவிச்சந்திரனுடன் காதல், கடத்தல் கும்பலுடன் மோதல் என ஒரு கதாநாயகனுக்கே உரிய கடமைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் தான்யா ரவிச்சந்திரன் அழகும், நடிப்பு திறமையும் மிகுந்த நாயகி என்பதை நிரூபிக்கிறார்.

கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற பெயரில் ஊர் தலைவராக வருகிறார், ராதாரவி. வாசுதேவன் என்ற தொல்லியல் துறை உயர் அதிகாரியாக கே.எஸ்.ரவிகுமார், ஊழியர் பகவதி பெருமாள், வில்லன் ஹரீஸ் பெராடி ஆகியோரும் கதாபாத்திரங்களாக மனதில் பதிகிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய சிறப்பு அம்சம்,இளையராஜாவின் பின்னணி இசை. காட்சிகளை உயிரோட்டமாக பார்வையாளர்களின் மனதுக்குள் கடத்துகிறது. அருண்மொழி மாணிக்கத்தின் திரைக்கதை ஒரு திகில் பட அனுபவத்தை தருகிறது. கிசோர் டைரக்டு செய்திருக்கிறார். வித்தியாசமான கதை. உச்சக்கட்ட காட்சியை இவ்வளவு நீளத்துக்கு இழுத்திருக்க வேண்டாம்.


Next Story