பொருளு: சினிமா விமர்சனம்


பொருளு: சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஏழுமலை நடிகை: கரோலின்  டைரக்ஷன்: ஏழுமலை இசை: சவுந்தர்யன் ஒளிப்பதிவு : வாசுதேவன்

சமூக அக்கறை படங்களின் வரிசையில் ‘பொருள்‘ பொதிந்த படைப்பு

தவறான உறவு முறையால் பிறந்து தெருவோரம் வீசப்படும் குழந்தைகளை ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அந்த குழந்தைகள் வளர்ந்ததும் பிச்சை எடுக்கும் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். அந்த கூட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமையும் செய்கின்றனர். காமுகர்களை அவளோடு வளர்ந்தவன் தாக்குகிறான். தவறு செய்பவர்களை தொடர்ந்து தட்டிக் கேட்கவும் செய்கிறான். இதனால் அவனுக்கு ஊரில் செல்வாக்கு உயர தாதா தனக்கு உதவியாளராக சேர்த்துக் கொள்கிறான். இது அவனது வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பது மீதி கதை.

நாயகனாக வரும் ஏழுமலை பிறர் நலனுக்காக உழைப்பது, கொடுமைகளை பார்த்து பொங்குவது, ஆதரவற்றவர்களை தம்பி, தங்கைகளாக பாவித்து பாசம் காட்டுவது, தன்னை காதலிக்கும் பெண்ணிடம் வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கும் தனது நிலைமையை சொல்லி ஒதுங்குவது என்று கதாபாத்திரத்தில் வலு சேர்த்துள்ளார். சண்டை காட்சிகளில் வேகம் காட்டி உள்ளார்.

நாயகி கரோலின் காதல் காட்சிகளில் கவர்கிறார். மணிமாறன் அரசியல்வாதியாக கெத்து காட்டுகிறார். ராஜ்குமார் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

தீப்பெட்டி கணேசன், கதாநாயகியின் தந்தையாக வரும் பாய்ஸ் ராஜன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நியாயம் செய்துள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கும் மாற்றுத் திறனாளியாக வரும் பேராண்மை வேலுவின் நடிப்பு மனதை தொடுகிறது.

திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வுகள் இருப்பது பலகீனம்

குழந்தைகளை தவறான முறையில் பெற்று தவிக்க விடும் கொடுமையை கருவாக வைத்து சமூக அக்கறையோடு படம் எடுத்துள்ளார். இயக்குனர் ஏழுமலை.

சவுந்தர்யன் இசையில் குத்து குத்து கும்மா குத்து பாடல் துள்ளல் ரகம். பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. வாசுதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Next Story