பாலியல் வன்கொடுமை - "பாரின் சரக்கு" சினிமா விமர்சனம்


பாலியல் வன்கொடுமை - பாரின் சரக்கு சினிமா விமர்சனம்
x
நடிகர்: கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன் நடிகை: அஃப்ரினா, ஹரினி, இலக்கியா  டைரக்ஷன்: விக்னேஷ்வரன் கருப்புச்சாமி இசை: பிரவீன் ராஜ் ஒளிப்பதிவு : சிவநாத் ராஜன்

கற்பழிப்பு கொலையாளியைக் கடத்தி காவல்துறையினரிடம் இருந்து மறைத்தது பாதுகாப்பு அளிக்கும் ரவுடி கும்பல். கொலையாளி பிடிபட்டானா? என்பது கதை

குஜராத்தில் போலீஸ் அதிகாரி மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய மந்திரி மகனை விபத்தில் இறந்து விட்டதுபோல் நாடகமாடி தமிழகத்துக்கு ரகசியமாக அனுப்பி வைக்கின்றனர். பெரிய தொகையை பேரமாக பேசி தமிழகத்தில் உள்ள ரவுடி கும்பல் அவனுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் அவனை தேடி இன்னொரு கோஷ்டி களம் இறங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சல்லடை போட்டு தேடுகின்றனர். மந்திரி மகன் பிடிபட்டானா? அவனை தேடுவது யார் என்பது கிளைமாக்ஸ்.

குற்றம் செய்த ஒருவனை போலீஸ் மிடுக்கோடு வரும் இளைஞர்கள் தண்டிப்பதுபோன்று எதிர்பார்ப்புடன் படம் தொடங்குகிறது. பாரின் சரக்கு என்ற பெயரில் அனுப்பி வைக்கப்படும் குஜராத் இளைஞனை ரகசிய இடத்தில் தங்க வைத்து பாதுகாப்பு வியூகங்கள் அமைக்கும் ரவுடிகள் பக்கம் கதை தாவியதும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை எகிற செய்கிறது. முகமூடி அணிந்து வரும் இளைஞர்கள் ரவுடிகளிடம் மோதும் காட்சிகள் வேகம். குஜராத் இளைஞனை தேடும் கும்பல் யார் என்ற முடிச்சு அவிழ்வதும் அவர்களின் பிளாஷ்பேக் காட்சிகளும் எதிர்பாராத திருப்பம்.

கோபிநாத், சுந்தர், சுரேந்தர் சுந்தர பாண்டியன் ஆகியோர் கதாபாத்திரத்தில் ஒன்றுகின்றனர். அப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் சிறிது நேரம் வந்தாலும் கவனிக்க வைக்கின்றனர். உசேன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ஆரம்ப காட்சிகள் குழப்ப நிலையில் மெதுவாக சென்றாலும் போகப்போக சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி உள்ளார் இயக்குனர் விக்னேஷ்வரன் கருப்பசாமி. பிரவீன் ராஜ் பின்னணி இசை, சிவநாத் ராஜன் ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளது.


Next Story