வர்ணாஸ்ரமம்: சினிமா விமர்சனம்


வர்ணாஸ்ரமம்: சினிமா விமர்சனம்
x
நடிகை: சிந்தியா லவ்ர்டே  டைரக்ஷன்: சுகுமார் அழகர் சாமி இசை: தீபன் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு : பிரவீணா

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடப்பதை அறிந்து அதிர்ச்சியாகும் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் சிந்தியா லவ்ர்டே அதை ஆவணப்படமாக எடுக்க சென்னை வருகிறார்.

அவருக்கு ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன், வைஷ்ணவி ராஜ் ஆகியோர் உதவி செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுக்கிறார். கவுரவக் கொலைகள் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களை சேகரிக்கிறார். இதனால் அவருக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன.

ஆவணப்படத்தை எடுத்து முடிக்கும் தருவாயில் சாதிமாறி காதலித்த இன்னொரு ஜோடி ஊரை விட்டு ஓடிவந்து சிந்தியா லவ்ர்டேயிடம் தஞ்சம் அடைகின்றனர். அவர்களை உறவினர்கள் கொலைவெறியோடு துரத்துகிறார்கள். அந்த காதல் ஜோடி நிலைமை என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.

பெண் பத்திரிகையாளராக வரும் சிந்தியா லவ்ர்டே கதாபாத்திரத்தில் கச்சிதம். ஆணவக்கொலைகள் நடப்பதை அறிந்து வருந்துவது, ஆவேசப்படுவது, சாதிவெறியர்களிடம் கோபப்படுவது, அறிவுரை சொல்வது என்று உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகனாக வரும் ராமகிருஷ்ணன் கோபம், அன்பு, விரக்தியில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து மனதில் நிற்கிறார். பிளாஷ்பேக் கதையை சொல்லி உருகவும் வைக்கிறார். சாதிவெறி பிடித்த வில்லனாக இன்னொரு கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார்.

உயர்சாதி அடையாளத்தோடு வரும் வைஷ்ணவி ராஜ், சாதி பாகுபாடுகள், சடங்கு சம்பிரதாயங்களை சீர்திருத்த பார்வையோடு சாடி கைதட்டல் பெறுகிறார்.

அமீர், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குஹாஷினி, நிமி மானுவல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்து தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

சாதிமாறி காதலிக்கும் பெண்ணின் அண்ணனாக வரும் ஏ.பி.ரத்னவேல் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பிறகு காதல், எதிர்ப்புகள், கொலை என்று விறுவிறுப்புக்கு மாறுகிறது. கவுரவக்கொலைகள் நடக்கும் ஒவ்வொரு கிளை கதையும் பதற வைக்கிறது.

ஆணவக்கொலைகள் கொடூரத்தையும் அதன் பின்னணியையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அழுத்தமான திரைக்கதையில் படமாக்கி உள்ள இயக்குனர் சுகுமார் அழகர் சாமியின் சமூக அக்கறையை பாராட்டலாம்.

தீபன் சக்கரவர்த்தி இசை கதையோடு ஒன்ற வைக்கிறது. பிரவீணா கேமரா கொலை களத்தை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளது.


Next Story