விழித்தெழு: சினிமா விமர்சனம்


விழித்தெழு: சினிமா விமர்சனம்
x
நடிகர்: அசோக் நடிகை: காயத்ரி  டைரக்ஷன்: ஏ.தமிழ்ச் செல்வன் இசை: நல்ல தம்பி ஒளிப்பதிவு : இனியன் கதிரவன்

இணையதள மோசடிகளை பின்னணியாக வைத்து உருவாகி உள்ள படம்.

மகளுக்கு அவசர சிகிச்சை செய்வதற்காக இணையதளம் மூலம் கருணைத்தொகையாக உதவி பெற்ற ஒரு ஏழைத் தந்தை, துணிக்கடையில் வேலை செய்யும் ஓர் இளம் பெண், சபல புத்தி பள்ளி ஆசிரியர், சமூக ஊடகங்களில் இருக்கும் ஒரு மனிதர், மகள் திருமணத்திற்குப் பணம் இல்லாமல் தவிக்கும் தந்தை என ஐந்து பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலையின் பின்னணியில் இணையதள மோசடிகள் இருப்பதை மோப்பம் பிடிக்கிறது காவல்துறை. மோசடி கும்பலை பிடிக்க போலீஸ் அதிகாரி அசோக் தலைமையில் ஒரு குழு செல்கிறது.

புத்திசாலி மாணவர்களை கையாள்களாக வைத்து இணைய மோசடிக் கும்பலின் தலைவன் தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரையும் ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபடுகிறான். அந்த கும்பல் பிடிபட்டதா? என்பது மீதி கதை. விசாரணை பிரிவின் தலைவராக போலீஸ் மிடுக்குடன் வருகிறார் அசோக். பன்னிரண்டு ஆண்டுகளாக மாறுவேடத்தில் ஊரை ஏமாற்றி திரியும் ஒரு குற்றவாளியைச் சுட்டுத் தள்ளுவதில் இருந்து அவரது ஆக்சன் தொடங்குகிறது.

அவரது குழுவில் இருப்பவராக வரும் காயத்ரி கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.

மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வைத்திருந்த பணத்தை இழக்கும் தந்தையாக வரும் சரவணன் இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார். அவரது மனைவியாக சுஜாதா நடித்துள்ளார். மோசடிக் கும்பலின் தலைவன் ராம்தேவ் சிங்காக வருபவர் வில்லன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். பத்திரிகையாளராக வரும் துரை ஆனந்த் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

சில காட்சிகள் பழைய பாணியில் இருப்பது பலகீனம். திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். நல்ல தம்பி இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன. இனியன் கதிரவன் ஒளிப்பதிவும் பலம்.

இணையதள மோசடிகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்புணர்வோடு கதை சொல்லி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் ஏ.தமிழ்ச் செல்வன்.


Next Story