விதையில்லா கருப்பு திராட்சை விளைச்சல் அதிகரிப்பு


விதையில்லா கருப்பு திராட்சை விளைச்சல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2018 3:15 AM IST (Updated: 6 Aug 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த விதையில்லா கருப்பு திராட்சை விளைச்சல் அதிகரித்துள்ளது.

உத்தமபாளையம்,



தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கூடலூர், அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலேயே ஆண்டுதோறும் திராட்சை பழம் கிடைக்கும் இடமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளங்குகிறது. இந்த பகுதியில் மழை மற்றும் பனிக்காலங்களாகிய அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்ள காலங்களில் செவட்டை மற்றும் சாம்பல் நோய் தாக்கி திராட்சை விளைச்சல் மிகவும் குறைந்து விடும். இதை தவிர பழங்கள் வெடிப்பு ஏற்பட்டு அழுகல் நோய் தாக்கி விவசாயத்திற்கு செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து திராட்சை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளை அழைத்து ஏற்றுமதி தரம் வாய்ந்த திராட்சைகளை எவ்வாறு பயிர் செய்வது என்பது குறித்தும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. மேலும் ஏற்றுமதி தரம் வாய்ந்த திராட்சை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ‘டாக்ரீட்ஜ்’ என்ற வேர்க்குச்சிகள் வழங்கப்பட்டது. அதிக லாபம் தரக்கூடிய விதையில்லா கருப்பு திராட்சை புதிய வகைகளான ரெட்குளோப், மெடிக்கா, சரத் ஆகியவற்றை சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி விவசாயிகள் கன்னிசேர்வைபட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சரத் என்ற வகையை சேர்ந்த விதையில்லா கருப்பு திராட்சை சாகுபடி செய்தனர். தற்போது அந்த பகுதிகளில் கருப்பு விதையில்லா திராட்சை விளைச்சல் அதிகரித்துள்ளது.

ஒரு ஏக்கர் நிலத்தில் 10 டன்னுக்கு மேல் திராட்சை மகசூல் கிடைத்துள்ளது. ஏற்றுமதி தரம் வாய்ந்த இந்த விதையில்லா கருப்பு திராட்சை பழத்தை வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story