ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு: கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்ட காளைகள்


ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு: கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்ட காளைகள்
x
தினத்தந்தி 17 Jan 2021 1:27 AM GMT (Updated: 17 Jan 2021 1:27 AM GMT)

ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி காளைகள் அழைத்து வரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தோகைமலை, 

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.டி.மலையில் பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் 60-ம் ஆண்டையொட்டி இந்தாண்டும் நேற்று ஜல்லிக்கட்டு நடத்த ஊர் மக்கள் ஒன்றிணைந்து கமிட்டி குழுவினரால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு மாவட்ட கலெக்டர், போலீசாரிடம் எந்த விதமான அனுமதி கடிதம் பெறவில்லை. இருப்பினும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என நினைத்து ஜல்லிக்கட்டு காளைகள் ஏராளமானவை ஆர்.டி.மலைக்கு வந்திருந்தது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் வாடிவாசல் வழியாக கோவில் காளைகளை மட்டும் அழைத்து செல்ல முடிவு செய்தனர். பின்னர் கோவில் காளைகளை மட்டும் கரையூரான் கோவிலில் இருந்து வாடிவாசல் வரை அழைத்து வந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு நடத்தவும், வாடிவாசல் வழியாக காளைகள் செல்லவும் அனுமதி இல்லை என்று கூறி அதனை தடுத்து நிறுத்தி விழாக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் கோவில் காளைகள் மட்டும் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கரையூரான் கோவிலில் இருந்து கோவில் காளைகள் அழைத்து வரப்பட்டு, விராச்சிலை ஈஸ்வரர் கோவிலை சுற்றி வந்தது.

தொடர்ந்து விழாக்குழுவினர் பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து சாமி தரிசனம் செய்தனர். ஜல்லிக்கட்டு நடப்பதாக நினைத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் ஆர்.டி.மலையில் மட்டுமே ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story