மாணவருக்கு அரிவாள் வெட்டு-வீடுகள் சூறை: நெல்லை அருகே பதற்றம் நீடிப்பு 50 பேர் மீது வழக்கு-போலீசார் குவிப்பு


மாணவருக்கு அரிவாள் வெட்டு-வீடுகள் சூறை:  நெல்லை அருகே பதற்றம் நீடிப்பு  50 பேர் மீது வழக்கு-போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 7:48 PM GMT (Updated: 17 Jun 2021 7:48 PM GMT)

மாணவருக்கு அரிவாள் வெட்டு, வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நெல்லை அருகே பதற்றம் நீடிக்கிறது. இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை:
மாணவருக்கு அரிவாள் வெட்டு, வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நெல்லை அருகே பதற்றம் நீடிக்கிறது. இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அரிவாள் வெட்டு

நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் முல்லை நகரை சேர்ந்த மாடசாமி மகன் பாலமுகேஷ் (வயது 19). ஐ.டி.ஐ. மாணவரான இவர்  நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் அங்குள்ள பாளையங் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் பாலமுகேஷை அரிவாளால் வெட்டி விட்டு, தப்பிச் சென்று விட்டனர். இதில் காயமடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே, பாலமுகேசுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்

வீடுகள் சூறை

இதையடுத்து அவரது தரப்பினர் கீழமுன்னீர்பள்ளத்தில் உள்ள மற்றொரு தரப்பினரின் வீடுகளை கல்வீசி தாக்கி சூறையாடினார்கள். மேலும் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் சேதப்படுத்தினர். இதுதவிர அந்த பகுதியில் உள்ள ஒருவரது வைக்கோல் படப்புக்கு தீவைக்கப்பட்டது. வீடுகள் தாக்கப்பட்டதை கண்டித்து மற்றொரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பையும் அமைதிப்படுத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அங்கு விடிய விடிய போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

50 பேர் மீது வழக்கு

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி பாலமுகேஷை அரிவாளால் வெட்டியதாக முன்னீர்பள்ளத்தை சேர்ந்த சங்கரலிங்கம் (26) அவருடைய தம்பி அருண்பாண்டியன் (20) உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இதுதவிர வீடுகளை சேதப்படுத்தியது தொடர்பாக மற்றொரு தரப்ைப சேர்ந்த 40 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதற்றம் நீடிப்பு

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது. இதையொட்டி அங்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 1000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி முன்னீர்பள்ளத்தில் நேற்று நெல்லை உதவி கலெக்டர் சிவா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருதரப்பையும் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்காக இருதரப்பையும் சேர்ந்தவர்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம் பகுதியில் குவிந்தனர். அங்கு மோதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தென்மண்டல ஐ.ஜி.  விசாரணை

இதற்கிடையே, தென் மண்டல ஐ.ஜி. அன்பு நேற்று முன்னீர்பள்ளத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். அவர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, பாலமுகேஷை வெட்டியது தொடர்பாக நேற்று இரவில் 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்

இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு ராஜாமணி என்ற மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்புக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் மூலம் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

பாலமுகேஷை அரிவாளால் வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story