பெண் போலீசை வழிமறித்து, கைவிரலை கடித்த 2 வாலிபர்கள் கைது


பெண் போலீசை வழிமறித்து, கைவிரலை கடித்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 18 Jun 2021 2:14 AM IST (Updated: 18 Jun 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

இரவில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் போலீசை வழிமறித்து, கைவிரலை கடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருஞானம் (வயது 32). இவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி இளவரசி (28). இவர் அதே போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்து இளவரசி, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். சின்னவளையம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது 2 பேர் மதுபோதையில் சாலையின் நடுவில் நின்று, மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.
கட்டையால் அடித்தனர்
அப்போது எதிரே லாரி வந்ததால் வேறு வழி இல்லாமல் மோட்டார் சைக்கிளை இளவரசி நிறுத்தினார். அப்போது 2 பேரும், மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டுள்ளனர். இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, அவர்களிடம், இப்படித்தான் நடுரோட்டில் நின்று உதவி கேட்பதா? என்று கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் 2 பேரும், கீழே கிடந்த கட்டையை எடுத்து இளவரசியின் தலையில் அடித்துள்ளனர். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால், அவருக்கு காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் தகராறு செய்ய அருகில் வந்தபோது, இளவரசி தற்காப்புக்காக அவர்களின் சட்டையை பிடித்து தள்ளி விட முயன்றுள்ளார்.
கைவிரலில் காயம்
அப்போது அவர்கள், இளவரசியின் கை விரலை பிடித்து கடித்து விட்டு தப்பி ஓட முயன்றனர். இதில் இளவரசியின் கை விரலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வடிந்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் உதவியுடன்  2 பேரையும் வளைத்து பிடித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் இளவரசி ஒப்படைத்தார்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்த இளங்கோவனின் மகன் வல்லரசு என்ற இளங்குமரன் (22), கிருஷ்ணமூர்த்தியின் மகன் பிரபாகரன் (20) என்பதும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்ததும், சம்பவம் நடந்தபோது அவர்கள் குடிபோதையில் இருந்ததும், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனம் கொடுக்காததால் சாலையில் நின்று ‘லிப்ட்’ கேட்டதும், தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சை
இதற்கிடையே காயமடைந்த இளவரசி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். குடிபோதையில் 2 பேர், பெண் போலீசின் கை விரலை கடித்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story