மழையில் நனைந்து வீணாவதை தடுக்க உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
வேப்பந்தட்டை பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வேப்பந்தட்டை:
கொள்முதல் நிலையங்கள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் பூலாம்பாடி, அரும்பாவூர், தொண்டமாந்துறை, அன்னமங்கலம், கை.களத்தூர், வி.களத்தூர், பாண்டகப்பாடி ஆகிய 7 ஊர்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது வயலில் விளையும் நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
குறிப்பாக தனியார் வியாபாரிகளை காட்டிலும், அரசு கொள்முதல் நிலையத்தில் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் தங்களது நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மழைநீரில் நனைந்து வீணாகும் நிலை
இந்நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்படும் வரை தங்களது பொறுப்பிலேயே தார்ப்பாய் கொண்டு மூடி மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது கொள்முதல் நிலையத்தின் மூலம் டோக்கன் வழங்கப்படும்.
அதன் பின்னர் 15 நாள் முதல் ஒரு மாதம் வரை காத்திருந்து விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்யும் சூழ்நிலை உள்ளது. இந்த காலகட்டங்களில் மழை பெய்தால் பல விவசாயிகளின் நெல் நீரில் நனைந்து வீணாகும் சூழ்நிலை உள்ளது. எனவே அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணியாளர்கள் வராததால்...
மேலும் இது தொடர்பாக கொள்முதல் நிலைய பணியாளர் ஒருவர் கூறுகையில், தற்போது கொரோனா காலம் என்பதால் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் மூட்டை தூக்குபவர்கள், சாக்கு தைப்பவர்கள், நெல் தூற்றுபவர்கள் என பணியாளர்கள் சரியாக வேலைக்கு வரவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தற்போது வராததால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது, என்றார்.
Related Tags :
Next Story