துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிப்பு; கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கைது
பெங்களூரு அருகே துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த, கிராம பஞ்சாயத்து உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு: பெங்களூரு அருகே துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த, கிராம பஞ்சாயத்து உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.
முகநூல் மூலம் பழக்கம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிலவரஹள்ளியை சேர்ந்தவர் அகமது பாஷா. இவர் பிலவரஹள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அகமது பாஷாவுக்கும், பெங்களூரு ஹெப்பாலை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருந்தது.
இதனால் அவர்கள் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். அப்போது அகமது பாஷா இளம்பெண்ணிடம் தான் கவுன்சிலராக இருப்பதாக கூறி உள்ளார். இதனை இளம்பெண்ணும் நம்பி உள்ளார்.
மாடலிங் துறை
இந்த நிலையில் இளம்பெண் தனக்கு மாடலிங் துறையில் பணியாற்ற விருப்பம் உள்ளதாக அகமது பாஷாவிடம் தெரிவித்து உள்ளார். அப்போது தனக்கு மாடலிங் துறையை சேர்ந்த பலரை தெரியும் என்றும், மாடலிங் துறையில் பணியாற்ற உதவி செய்வதாகவும் இளம்பெண்ணிடம், அகமது பாஷா கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய அகமது பாஷா, மாடலிங் துறையில் வேலை வாங்கி தருவது தொடர்பாக பேச தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண்ணும், அகமது பாஷா வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அகமது பாஷா இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றதாக தெரிகிறது.
துப்பாக்கி முனையில் கற்பழிப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சல் போட்டு உள்ளார். அப்போது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து இளம்பெண்ணை சுட்டு விடுவதாக அகமது பாஷா மிரட்டி உள்ளார். பின்னர் துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை அகமது பாஷா கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி அகமது பாஷா புகைப்படம் எடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் சம்பவம் குறித்து வெளியே கூறினால் ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டி இளம்பெண்ணை, அகமது பாஷா அனுப்பி வைத்ததாக தெரிகிறது. ஆனாலும் அவரது மிரட்டலுக்கு அஞ்சாத இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து பன்னரகட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
கைது
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அகமது பாஷாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இளம்பெண்ணை போன்று 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள், இளம்பெண்களை மிரட்டி அகமது பாஷா பலாத்காரம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story