திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x
தினத்தந்தி 18 Jun 2021 4:13 AM GMT (Updated: 18 Jun 2021 4:13 AM GMT)

பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் அமைப்பது தொடர்பாக திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ரோப்கார்
சென்னையை அடுத்த பல்லாவரம் வட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 61-வது திவ்ய தேச தலமான திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இந்த கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் 288 படிக்கட்டுகள் உள்ளதால் எளிதாக நடக்க இயலாதவர்கள் மற்றும் முதியவர்கள் வசதிக்காக கம்பி வட ஊர்தி (ரோப்கார்) அமைப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் புனரமைப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நிழல் மண்டபங்கள்
அப்போது மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக உபயதாரர்கள் மூலம் படிக்கட்டுகளில் புதிதாக நிழல் மண்டபங்கள் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறும், அர்ச்சகர்கள் குடியிருப்பு மிகவும் பழுதடைந்துள்ளதால் அவற்றை மராமத்து செய்து புதுப்பிக்கவேண்டும் அல்லது அவர்களுக்கு நவீன வசதிகளுடன் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு உரிய மதிப்பீடு தயார் செய்து விரைவாக பணிகளை மேற்கொள்ளவும், பக்தர்களின் வசதிக்காக கழிப்பிட வசதி, கோவில் குளம் சீரமைத்தல், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யவும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவும் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், காஞ்சீபுரம் மண்டல இணை கமிஷனர் ஜெயராமன், செங்கல்பட்டு உதவி கமிஷனர் கவேனிதா, 
கோவில் செயல் அலுவலர் சக்தி மற்றும் என்ஜினீயர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story