தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாகை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை-விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், செல்வராசு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, முகமது ஷாநவாஸ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனர் குருநாதன், கலெக்டர் (பொறுப்பு) இந்துமதி, நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது மிகுந்த மன உளைச்சலுடன் தான் பொறுப்பேற்றார். ஏனெனில் அந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி இருந்தது.
பொறுப்பேற்றவுடன் முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசினார். தொற்றின் எண்ணிக்கையை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதன் பின்னர் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து பேசினார். இவ்வாறு முதல்-அமைச்சர் எடுத்த தொடர் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இதை விட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு எண்ணிக்கை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அதை எல்லாம் சமாளித்து தொற்றின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி மே மாதம் 7-ந் தேதி வரை சராசரியாக 60 ஆயிரம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று(அதாவது நேற்று முன்தினம்) ஒருநாள் மட்டும் 3 லட்சத்து 68 ஆயிரம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். தற்போது 6 லட்சத்து 16 தடுப்பூசி கையிருப்பு உள்ளது.
தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 16 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. இதில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதிற்கு மேல் உள்ள 5 கோடியே 68 லட்சம் பேருக்கு 2 தவணையாக தடுப்பூசி போட 11 கோடியே 36 லட்சம் டோஸ் வேண்டும். ஆனால் இதுவரை 1 கோடியே 16 லட்சம் டோஸ் தான் வந்துள்ளது. இன்னும் 10 கோடியே 20 லட்சம் அளவிற்கு தடுப்பூசி வர வேண்டும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து மத்திய அரசு தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தடுப்பூசி அளவை உயர்த்தி பெற்றுத்தருவார். இதனால் ஒட்டு மொத்த தமிழர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்ற நிலை உருவாகும்.
நாகையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் நிறைவு பெறும். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் விரைவில் பிரித்து அறிவிக்கப்படும். நாகை மாவட்டத்தில் சித்த மருத்துவ பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரம் உயர்த்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story