செம்மேடு உக்குளத்தின் கரை உடைப்பு


செம்மேடு உக்குளத்தின் கரை உடைப்பு
x
தினத்தந்தி 18 Jun 2021 8:14 PM IST (Updated: 18 Jun 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

செம்மேடு உக்குளத்தின் கரை உடைப்பு

பேரூர்

செம்மேடு உக்குளத்தின் கரை உடைந்து வெளியேறிய தண்ணீர் விவசாய பயிர்களை சூழ்ந்து தேங்கி நிற்கிறது.

செம்மேடு உக்குளம்

கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே செம்மேடு கிராமத்தில் உக்குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக, ஆறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதி கரித்துள்ளது. இதில், செம்மேடு அருகே உள்ள உக்குளத்தில் மழைநீர் தேங்கி நிரம்பியது.

 இந்த குளத்து தண்ணீரை நம்பி அங்குள்ள நூற்றுக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கரையில் உடைப்பு

மழை காரணமாக குளம் நிரம்பிய நிலையில் குளத்தின் கரையில் அரிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், கரையின் ஒரு பகுதி யில் நேற்று முன்தினம் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. 

இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் வெள்ளம்போல் வெளியேறி அங்குள்ள சுமார் 25 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. 

இதனால் அதில் பயிரிட்டிருந்த சின்ன வெங்காயம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் அங்கு திரண்டனர். 

அவர்கள், விவசாயி நிலங்களுக்குள் தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில் குளத்தின் வலது ஓரத்தில் உள்ள மதகை திறந்து விட்டனர். 

இதனால் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறுவது குறைந்தது.
கரையை பலப்படுத்தினர்

இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டி உடைந்த குளத்தின் கரையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் கரைபலப்படுத்தப்பட்டது.

100 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் 20 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு உள்ளது. அதை முழுமையாக அகற்றி குளத்தில் போதுமான அளவு தண்ணீரை தேக்கவும், விவசாய பாசன நிலங்களுக்கு தண்ணீரை திறந்து விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story