வீராணம் குழாயில் உடைப்பு
விக்கிரவாண்டி அருகே வீராணம் குழாயில் உடைந்ததால் குடிநீர் வீணாக ஓடியது.
விக்கிரவாண்டி,
சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதாவது வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 220 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. வினாடிக்கு அதிகபட்சமாக 76 கன அடி வரை இந்த குழாய் வழியாக கொண்டு செல்லலாம்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் கப்பியாம்புலியூர் அருகே வீராணம் குடிநீர் குழாயில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அந்த குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறியது. தொடர்ந்து 5 மணி நேரத்துக்கு மேலாக குடிநீர் வெளியேறியதால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் குளம்போல் தேங்கியது.
கோடைகாலத்தில் குடிநீர் வீணாவதை பார்த்து, அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சென்னையில் இருந்து மெட்ரோ குடிநீர் திட்ட அதிகாரிகள் இரவு 7 மணி அளவில் வந்து, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக செல்லும் குழாய்கள் மற்றும் பம்ப் ஹவுஸ் ஆகியவற்றை அவ்வப்போது அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இதுபோன்ற பிரதான குழாய்கள் மற்றும் பராமரிப்புக்கூடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story