இந்திய கடற்படையின் பாதுகாப்பு பலமாக உள்ளது. கிழக்கு பிராந்திய துணை தளபதி பேச்சு


இந்திய கடற்படையின் பாதுகாப்பு  பலமாக உள்ளது. கிழக்கு பிராந்திய துணை தளபதி பேச்சு
x
தினத்தந்தி 18 Jun 2021 10:45 PM IST (Updated: 18 Jun 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கடற்படையின் பாதுகாப்பு பலமாக உள்ளது என்று கிழக்கு பிராந்திய துணை தளபதி அஜென்த்ரா பகதூர்சிங் கூறினார்.

அரக்கோணம்

ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இந்திய கடற்படை விமானதளத்தில் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த ஜனவரி 21-ந் தேதி முதல் 22 வாரங்கள் பயிற்சி மேற்கொண்ட 7 கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தள வளாகத்தில் நடந்து. கேப்டன் ஆர்.வினோத்குமார் தலைமை தாங்கினார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக கடற்படையின் கிழக்கு பிராந்திய துணை தளபதி அஜென்த்ரா பகதூர் சிங் கலந்துக்கொண்டு வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சி முடித்த 7 கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

மேலும் பயிற்சியில் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக விளங்கிய சப்-லெப்டினென்ட் கே.பவன்ராஜிக்கு கேரளா ஆளுனர் சுழற்கோப்பையும் லெப்டினென்ட் தனஞ்செய் பிரகாஷ் யாதவ்க்கு கிழக்கு பிராந்திய சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. 
விழாவில் கடற்படையின் கிழக்கு பிராந்திய துணை தளபதி அஜென்த்ரா பகதூர் சிங் பேசியதாவது:-
கடற்படையின் பாதுகாப்பு

இந்திய விமானப்படை என்பது பல சவால்கள் நிறைந்தது. அதில் பயிற்சி முடித்த நீங்கள் பல்வேறு சவால்களை சந்திக்க உள்ளீர்கள். கடற்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதிதாக மேம்படுத்தப்பட்ட அதிநவீன (துருவ்) இலகு வகை ஹெலிகாப்டர்கள், அமெரிக்கா- ஐக்கிய நாடுகளில் இருந்து எம்.எஸ்.60 ஆர் வகை நவீன ஹெலிகாப்டர்களும், கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் சேர்க்கப்பட்டுள்ளது, 
இந்திய கடற்படையின் பாதுகாப்பு பலமாக உள்ளது. மேலும் பாதுகாப்பை பலப்படுத்த உங்களை போன்று பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற வீரர்களின் பங்கும் இன்றியமையாததாக உள்ளது. பணியில் சிறப்பாக தேர்ச்சி பெற்று பல்வேறு கடற்படை இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

752 பேருக்கு பயிற்சி

பயிற்சி நிறைவு செய்த விமானிகள் மும்பை, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பணிக்கு செல்கின்றனர். இந்தியா மற்றும் நட்பு நாடுகளில் இருந்தும் சுமார் 752 பேருக்கு இதுவரை ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story