தூத்துக்குடியில் 123 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி


தூத்துக்குடியில் 123 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி
x
தினத்தந்தி 18 Jun 2021 11:15 PM IST (Updated: 18 Jun 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 123 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் ரேஷன்கார்டு இல்லாத திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 123 பேருக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2 ஆயிரம் மற்றும் 10 நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் ஆகியவற்றையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண உதவித்தொகையாக தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.4 ஆயிரம் இரண்டு தவணைகளாக வழங்க உத்தரவிட்டார். இதில் ரேஷன்கார்டு உள்ள திருநங்கைகள் அனைவரும் பயன்பெற்றார்கள். ரேஷன்கார்டு இல்லாத திருநங்கைகள் தங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்து 500 திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 123 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது.
 
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திருநங்கைகளுக்கு என நலவாரியம் அமைத்தார். இலவச வீட்டுமனைப்பட்டா, ரேஷன்கார்டு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார். அவரது வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநங்கைகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் இணையதளம் மூலமாகவும் அடையாள அட்டைகளை பெறலாம். ரேஷன்கார்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படும். உங்களது தகுதியின் அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. நீங்கள் அரசின் உதவிகளை பெற்று அவைகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி மற்றும் அலுவலர்கள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

Next Story