ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
விருதுநகரில் ரேஷன் கடைகளில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகரில் ரேஷன் கடைகளில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.
வினியோகம்
தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2-வது தவணை நிவாரண நிதி உதவி ரூ. 2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை வினியோகம் செய்ய உத்தரவிட்டு அந்த பணி நடைபெற்று வருகிறது.
விருதுநகர் பகுதியில் பல ரேஷன் கடைகளுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வந்துள்ள நிலையில் நிவாரண நிதி வழங்குவதற்கான தொகை வராத நிலையில் வினியோக பணி முடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் மேகநாத ரெட்டி நேற்று விருதுநகர் பாண்டியன் நகரில்உள்ள ரேஷன் கடையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா சிகிச்சை மையம்
பொருட்கள் வினியோகம் மற்றும் நிவாரண நிதி வினியோகம் ஆகியவை குறித்து அங்கு வந்திருந்த ரேஷன் கார்டுதாரர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் தாமதம் இல்லாமல் வினியோகம் நடைபெற வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களிடம் தெரிவித்தார். ரேஷன் கடையில் முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை அறிவிக்கும் அறிவிப்பு பலகைகளை வைக்குமாறு கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
டாக்டர்களுக்கு நன்றி
இதைதொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு புறநோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் பிரச்சினைகள் ஏதும் உள்ளதா என கேட்டறிந்தார்.
கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்களிடம் விவரங்களை கேட்டறிந்த அவர் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய டாக்டர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கல்யாணகுமார், மருத்துவத்துறை மற்றும் வழங்கல்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story