திருமணமான 4-வது நாளில் மூளைச்சாவு அடைந்த புதுப்பெண்
மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததால், திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானத்தால் 4 பேர் புதுவாழ்வு பெற்றனர்.
காரியாபட்டி,
மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததால், திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானத்தால் 4 பேர் புதுவாழ்வு பெற்றனர்.
புதுப்பெண்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர்பெருங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் சங்கர்ராஜ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், திருச்சுழி அருகே உள்ள சுத்தமடம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் முத்துமாரிக்கும் (24) கடந்த 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
தலையில் படுகாயம்
பின்னர் பந்தல்குடியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சங்கர்ராஜீம், முத்துமாரியும் விருந்துக்கு சென்றுவிட்டு கடந்த 16-ந் தேதி மறவர்பெருங்குடி கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி முத்துமாரி தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு திருச்சுழி அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உறுப்புகள் தானம்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் முத்துமாரி நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். டாக்டர்கள் கூறியதன் அடிப்படையில் முத்துமாரியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது கணவர் மற்றும் பெற்றோர் முன்வந்தனர்.
இதையடுத்து நேற்று அவரது சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை தானம் செய்தனர். திருமணம் முடிந்த 4 நாட்களிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த முத்துமாரியின் உடல் உறுப்புகள் தானத்தால் 4 பேர் புதுவாழ்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து எம். ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story