அரசு நிலத்தை சுத்தம் செய்து குடிசை போட முயற்சி


அரசு நிலத்தை சுத்தம் செய்து குடிசை போட முயற்சி
x
தினத்தந்தி 19 Jun 2021 1:24 AM IST (Updated: 19 Jun 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே அரசு நிலத்தை சுத்தம் செய்து குடிசை போட முயன்ற மக்களை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே அரசு நிலத்தை சுத்தம் செய்து குடிசை போட முயன்ற மக்களை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வீடுகள் இடிந்தன

மானாமதுரை அருகே சன்னதிபுதுக்குளம் கிராமத்தில் காலனி மக்களுக்கு 40 ஆண்டுக்கு முன்பு 45 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த வீடுகளில் பெரும்பாலானவை தற்போது இடியும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டின் வெளியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சன்னதிபுதுக்குளம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 60 ஏக்கரில் மேய்ச்சல், கால்நடை தீவன பண்ணை அமைப்பது குறித்து சமீபத்தில் கலெக்டர் மற்றும் கால்நடைதுறை அதிகாரிகள் பார்வையிட்டனர். தீவன பண்ணை அமைக்க 20 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் ஒதுக்கி உள்ளனர்.

சுத்தம் செய்தனர்

இந்த நிலையில் நேற்று காலை காலனி மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து தாங்கள் குடிசை போடுவதற்காக அரசு நிலத்தில் உள்ள முட்புதர்களை வெட்டி அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இது பற்றி அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசு நிலத்தை சுத்தம் செய்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்கள் தாங்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் எப்போது இடிந்து கீழே விழும் என்ற நிலையில் உள்ளது. எனவே எங்களுக்கு இந்த இடத்தில் புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு வருவாய்த்துறையினர் முறைப்படி அரசிடம் கோரிக்கை விடுங்கள். அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என கண்டித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாரிக் மற்றும் போலீசார் பொதுமக்களிடம், அரசின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்ளுமாறு கூறினார்கள். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story