ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி


ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 19 Jun 2021 2:44 AM IST (Updated: 19 Jun 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே புதிதாக கட்டும் வீட்டை பார்க்க வந்தபோது மரத்தில் கார் மோதியதில் கைக்குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கீழப்பழுவூர்:

வீட்டை பார்ப்பதற்காக...
அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60). இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வெற்றியூர் கிராமத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து குடும்பத்துடன் காரில் புறப்பட்டு வந்தார்.
அந்த காரில் அவரும், அவருடைய மனைவி, மகள்கள் நாகவள்ளி (23), நாகலட்சுமி (21) மற்றும் 9 மாத கைக்குழந்தையான ரித்திகா உள்ளிட்ட 3 பேரக்குழந்தைகள் உள்பட மொத்தம் 8 பேர் இருந்தனர். வெற்றியூர் கிராமத்தை நோக்கி அந்த கார் வந்தது.
தந்தை-மகள்கள் சாவு
நேற்று மதியம் அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த சாத்தமங்கலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சம்பவ இடத்திலேயே ராமமூர்த்தி மற்றும் அவரது மகள் நாகவள்ளி ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் அங்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் காரில் படுகாயத்துடன் இருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நாகலட்சுமி உயிரிழந்தார்.
கைக்குழந்தையும் இறந்தது
மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 3 குழந்தைகள் உள்பட 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கைக்குழந்தை ரித்திகா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story