தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி கவிழ்ந்தன-3 டிரைவர்கள் படுகாயம்; போக்குவரத்து பாதிப்பு
தொப்பூா் கணவாயில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி கவிழ்ந்தன. இதில் 3 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:
லாரிகள் மோதி கவிழ்ந்தன
நாக்பூரில் இருந்து கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக கோவைக்கு நேற்று காலை வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை சென்னையை சேர்ந்த டிரைவர் ஜான் (வயது 50) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை இரட்டைப் பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னால் சென்ற பாட்டில் தயாரிப்பு மூலப் பொருட்கள் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரி சாலையோர 10 அடி பள்ளத்தில் இறங்கி நின்றது. டேங்கர் லாரி மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றி வந்த 2 லாரிகளும் சாலையில் கவிழ்ந்தன.
3 டிரைவர்கள் படுகாயம்
இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் ஜான், அருள்மொழி (49), அத்தியான் (45) ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் 3 டிரைவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் 3 லாரிகளையும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களில் தொப்பூர் கணவாயில் 8 லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த தொடர் விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story