ஊரடங்கால் வெறிச்சோடிய விளையாட்டு மைதானங்கள்
ஊரடங்கால் விளையாட்டு மைதானங்கள் வெறிச்சோடி கிடப்பதால், பயிற்சி பெற முடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர்.
ஊட்டி
ஊரடங்கால் விளையாட்டு மைதானங்கள் வெறிச்சோடி கிடப்பதால், பயிற்சி பெற முடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர்.
அனுமதி இல்லை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் விளையாட்டு மைதானங்களில் வீரர்கள் பயிற்சி பெற அனுமதி இல்லை.
இதனால் ஊட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டு உள்ளது. வீரர்கள், இளைஞர்கள், மாணவர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டதால் மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மலைமேலிட பயிற்சி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மைதானம் சிந்தடிக் ஓடுதளம், உயர்கோபுர மின் விளக்குகள் மற்றும் பல்வேறு விளையாட்டுகளுக்கு தனி தளங்கள் என மேம்படுத்தப்பட்டது. மலை மேலிட பயிற்சி பெறுவதற்காக தனி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மலை மேலிட பயிற்சிக்காக வெளிமாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்து தங்கியிருந்து பயிற்சி பெறுவார்கள். மலைப்பிரதேசமான ஊட்டியில் தடகள பயிற்சி பெறுவதால் சமவெளி பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் வேகமாக ஓடி இலக்கை அடைய முடியும்.
மைதானங்கள் மூடல்
இந்த ஆண்டில் ஊரடங்கால் மலை மேலிட மற்றும் உள்ளூர் வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம், காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானம், காந்தி விளையாட்டு மைதானம் மூடப்பட்டு உள்ளது.
கால்பந்து, கைப்பந்து, தடகளம் போன்ற பயிற்சிகள் பெற்று வந்த வீரர்கள் மைதானத்துக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
வழிமுறைகளை கடைபிடித்து...
இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறியதாவது:- பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும். தற்போது பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் தவிப்பில் உள்ளோம்.
இதற்கு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வீரர்கள் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story