வாய்மேடு அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வாய்மேடு அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாய்மேடு:-
வாய்மேடு அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மின்மோட்டாரை இயக்க சென்றார்
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூரை சேர்ந்தவர் சுந்தரவடிவேலு. விவசாயி. இவருடைய மனைவி சிவஞானம்(வயது 53). இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டின் பின் பகுதியில் உள்ள மின்மோட்டாரை இயக்க சென்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென சிவஞானம் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். இதில் கண்ணில் மிளகாய் பொடி விழுந்ததில் எரிச்சல் தாங்க முடியாமல், கீழே விழுந்த சிவஞானம் மயங்கி விட்டார்.
சங்கிலி பறிப்பு
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் அவருடைய கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயக்கம் தெளிந்து சிவஞானம் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நாகையில் இருந்து மோப்ப நாய் ‘துலிப்’ வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடந்தது. அப்போது மோப்ப நாய் ‘துலிப்’ வீட்டில் இருந்து பின்புறம் சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்து கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
வலைவீச்சு
தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்தபோது அதன் ‘டாலர்’ பகுதி கீழே விழுந்து விட்டது. அதை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து சுந்தரவடிவேலு வாய்மேடு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரின் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் சங்கிலியை பறித்து சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story