பொதுமக்களின் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது சின்னமனூர்-எல்லப்பட்டி இணைப்புசாலை அமைக்க அரசு அனுமதி
சின்னமனூர்-எல்லப்பட்டி இணைப்புசாலை அமைக்க அரசு அனுமதியளித்து உள்ளது. இதனால் பொதுமக்களின் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியான எல்லப்பட்டியிலிருந்து சின்னமனூர் செல்லவேண்டும் என்றால் சுமார் 7 கிலோமீட்டர்தூரம் சுற்றி செல்ல வேண்டும். ஆனால் எல்லப்பட்டி முல்லைப்பெரியாறு பாலம் அருகே இணைப்பு சாலை அமைத்தால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் சின்னமனூர் சென்றுவிடலாம். எனவே இந்த இணைப்புசாலையை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்திய ‘உங்கள் தொகுதியில் மு.க. ஸ்டாலின்’ என்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் எல்லப்பட்டி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து இணைப்பு சாலை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்னாள் எம்.பி.யும், தேனி தி.மு.க.வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான தங்கதமிழ்செல்வன், உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் உதயகுமார் ஆகியோர் எல்லப்பட்டி- சின்னமனூர் இணைப்புசாலை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.
இது குறித்து தங்கதமிழ்செல்வன் கூறுகையில், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. சாலை அமைப்பதற்காக இடம் தருகிறோம் என்று விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர். இந்த இணைப்பு சாலை திட்டத்தால் பொதுமக்களின் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறி உள்ளது என்றார்.
பின்னர் தங்கதமிழ்செல்வன் குச்சனூர் பேரூராட்சிக்கு சென்று அங்குள்ள பொது மயானத்தில் தடுப்புச்சுவர் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், சின்னமனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் முருகேசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story