அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
சம்பளம் வாங்கும் முன்பு அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி, ஜூன்.20-
சம்பளம் வாங்கும் முன்பு அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் வேண்டுகோள் விடுத்தார்.
மருத்துவ உபகரணங்கள்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை சுகாதார துறையிடம் வழங்கும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது. மருத்துவ உபகரணங்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத்துறை செயலாளர் அருணிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, மாநில சுகாதார திட்ட இயக்கக இயக்குனர் ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்கொள்ள தயார்
புதுவையில் தடுப்பூசி திருவிழாவில் மக்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. கொரோனா 3-வது அலை என்பது வரக்கூடாது. இந்த அலை குழந்தைகளைத் தாக்கும் என்றும் தாக்காது என்று கூறுகின்றனர். எந்த வயதினரை தாக்கினாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
ஆரோக்கியம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு. இருந்த போதிலும் தடுப்பூசி போடுவதற்கு சில பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் வருகிற 1-ந் தேதிக்குள், அதாவது சம்பளம் வாங்கும் முன்பு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது தடுப்பூசி திருவிழா மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தயக்கம் நீங்கியது
அடுத்ததாக யோகா தினம் வருகிறது. அனைவரும் யோகா கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.
புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மூலம் கொரோனாவை கட்டுப் படுத்தி வருகிறோம். நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கான தயக்கம் நீங்கி வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் தொற்று பாதித்தாலும் அபாயம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story