அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகளை மின்னணு பணிப்பதிவேடுகளாக மாற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு


அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகளை மின்னணு பணிப்பதிவேடுகளாக மாற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு
x
தினத்தந்தி 19 Jun 2021 11:10 PM IST (Updated: 19 Jun 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

காகித பயன்பாட்டை தவிர்க்க அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகளை மின்னணுப் பணிப்பதிவேடுகளாக மாற்றும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூர், 

அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகளை மின்னணு பணிப்பதிவேடுகளாக மாற்றும் பணியை விரைவுப் படுத்துவது தொடர்பாக, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைத்து பட்டியல்களும் (IFHRMS ) இணைய வழி மூலம் தயாரித்து ஏற்பளிப்பு செய்யப்படுகிறது.

அதை தொடர்ந்து அனைத்து ஓய்வூதிய பலன்கள்,  அரசின் அனைத்து வரவினங்களும் இணைய வழியில் செலுத்தும் முறை, அனைத்து அரசு வைப்பு நிதிகளும் இணைய வழியில் பராமரித்தல் போன்ற பணிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பணிப்பதிவேடுகள்

தற்போது மின்னணு கையொப்பம் முறை மற்றும் மின்னணுப் பணிப்பதிவேடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் 2018-ம் ஆண்டு வரை மின்னணு பணிப்பதிவேடுகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. அதனால் அனைத்து துறை அலுவலர்களும் பணிப்பதிவேடுகள் புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

தமிழக அரசின் கருவூல கணக்குத் துறை மூலம் கருவூலம் மற்றும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் இணைத்து அனைத்து பணிகளையும் இணைய வழி மூலம் தயார் செய்து ஏற்பளிக்கும் முறை நடைமுறைப்படுத்தி, காகிதம் பயன்பாடு இல்லாமல் விரைந்து அரசின் வரவு செலவு கணக்கை உடனுக்குடன் அறிய இயலும் என்றும், இதன் மூலம் பணியாளர்களின் பணிச்சுமை மற்றும் காகித பயன்பாடு முற்றிலும் குறைக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் கருவூல கணக்குத் துறையின் சென்னை மண்டல இணை இயக்குனர் முத்துராமன், கடலூர் மாவட்ட கருவூல அலுவலர் பரணிதரன் மற்றும் அனைத்து துறை பணம் பெறும் அலுவலர்களும் பங்கேற்றனர்.

Next Story