கரூர் மாவட்டத்தில் அரசு பஸ்களை தயார் படுத்தும் பணி தீவிரம்


கரூர் மாவட்டத்தில் அரசு பஸ்களை தயார் படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Jun 2021 12:24 AM IST (Updated: 20 Jun 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் அரசு பஸ்களை தயார் படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்
ஊரடங்கு 
கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரைஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 
295 பஸ்கள்
இதனால் கரூர் கிளை 1, கிளை 2,  அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி உள்ளிட்ட போக்குவரத்து பணிமனைகளில் இருந்து தினமும் தொலை தூர அரசு பஸ்கள், கிராமப்புற பஸ்கள் என மொத்தம் 295 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் தினமும், சுமார் 1.76 லட்சம் பயணிகள் பயணித்து வந்தனர். இதனால் போக்குவரத்து கழகம் நாள் ஒன்றுக்கு ரூ.32 லட்சம் வருவாய் ஈட்டியது. தற்போது ஊரடங்கால் பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
அனுமதி வழங்கப்படலாம்
தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தொற்று மிகவும் குறைந்த பகுதிகளில் 50 சதவீத பணிகளுடன் பொதுபோக்குவரத்தை இயக்க மருத்துவக்குழுவினர் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனால் எப்போது வேண்டுமானும் பொதுபோக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
தயார் படுத்தும் பணி தீவிரம்
இதனால் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் தயார்படுத்தும் பணியில் ஈடுபட தொழில் நுட்பஊழியர்கள் தினமும் சுழற்சி முறையில் 20 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பஸ்களில் பேட்டரிகளை பொறுத்தி அதை இயக்கி பழுது நீக்கும் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பஸ்களில் அவ்வப்போது சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து பழுதுகள் அனைத்தும் சரி செய்து, தயார் படுத்தி வருகின்றனர்.
உத்தரவிட்டால்...
இதுகுறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் பொதுபோக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பஸ்கள் அனைத்தும் போக்கு வரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தினமும் சுழற்ச்சி முறையில் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பஸ்கள் சுத்தம்செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு பஸ்களை இயக்க உத்தரவிட்டால் எப்போது வேண்டுமாலும் பஸ்களை இயக்க தயார் நிலையில் உள்ளோம். என்றார்.
1 More update

Next Story