44 பேருக்கு முறைகேடாக வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் ரத்து
பெரம்பலூர் அருகே 44 பேருக்கு முைறகேடாக வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர்:
பள்ளி விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலத்தை அடுத்த சிறுவயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கூன் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். தன்னார்வலரான இவர், மங்கூன் பகுதியில் மலை அடிவாரத்தை ஒட்டி உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் விரிவாக்கத்திற்காக ஒதுக்கீடு செய்து வைக்கப்பட்டிருந்த 3 ஏக்கர் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன், வருவாய்த்துறையினர் பலருக்கு முறைகேடாக பட்டா செய்து கொடுத்ததாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி அரசு நிலத்தை மீட்குமாறும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, தமிழ்நாடு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் அனுப்பியிருந்தார்.
அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் உதவி கலெக்டர் பத்மஜா தலைமையில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.
வீட்டுமனை பட்டாக்கள் ரத்து
இந்த விசாரணையில், வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட 63 பேரில் 15 பேர் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் என்றும், 3 பேர் நக்கசேலம்- செட்டிக்குளம் சாலை விரிவாக்கத்தின்போது வீடு இழந்தவர்கள் என்றும், ஒருவர் ஆதரவற்ற விதவை என்பதும் தெரியவந்தது. மீதமுள்ள 44 பேர் முறைகேடாக வீட்டுமனை பட்டா பெற்றிருந்ததும் தெரியவந்தது.
விசாரணையின் அடிப்படையில் தகுதியான 19 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது போக, மீதமுள்ள 44 பேருக்கு முறைகேடாக வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்திடவும், நிலத்தை மீட்கவும் ஆலத்தூர் தாசில்தாருக்கு, உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அரசு நிலத்தை மீட்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story