ஊரடங்கு அமலில் இருக்கும்போது கோவில்களுக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது; கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கு அமலில் இருக்கும்போது கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது என்று கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: ஊரடங்கு அமலில் இருக்கும்போது கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது என்று கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விஜயேந்திரா சாமி தரிசனம்
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்கள் கடைகளை திறக்க காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை 4 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அரசு தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு அமலில் இருந்த போது முதல்-மந்திரி எடியூரப்பாவின் இளைய மகனும், கர்நாடக பா.ஜனதா துணை தலைவருமான விஜயேந்திரா மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதுகுறித்து கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அறநிலையத்துறைக்கு உத்தரவு
இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு மைசூரு கலெக்டருக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது விளக்கம் அளித்த கலெக்டர் ஊரடங்கு அமலில் இருக்கும்போது விஜயேந்திராவை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும், காலையில் பூஜை நடந்த போது கோவில் நடை திறந்து இருந்தது. அந்த நேரத்தில் கோவிலுக்கு வந்த விஜயேந்திரா சாமி தரிசனம் செய்தார் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் பொதுநல மனு மீதான விசாரணை நீதிபதிகள் அபய் சீனிவாஸ் ஓகா, சூரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது:-
ஊரடங்கை மீறி விஜயேந்திரா கோவிலுக்கு சென்று உள்ளார். அவர் இந்த வழக்கு மூலம் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கண்களை திறப்பவர்களாக இருக்க வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் போது கோவிலுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு அனுமதி கிடைக்கிறது.
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அரசியல்வாதிகள் உள்பட யாரையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க கூடாது என்று அறநிலையத்துறைக்கு, கர்நாடக அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
Related Tags :
Next Story