கேரளாவில் இளம்பெண் பிடிபட்டார்
ராமநாதபுரத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் மாயமான இளம்பெண்ணை தனிப்படை போலீசார் கேரளாவில் பிடித்து கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் மாயமான இளம்பெண்ணை தனிப்படை போலீசார் கேரளாவில் பிடித்து கைது செய்தனர்.
181 பவுன் நகைகள்
ராமநாதபுரம் முத்துகோரக்கி தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் மதன்குமார் (வயது32). இவரின் மனைவி அட்சயா (25). அட்சயா சில தினங்களுக்கு முன்னர் மாயமாகி விட்டாராம். அவர் வீட்டில் இருந்த 85 பவுன் நகைகளையும், தனது தந்தையின் வீட்டில் இருந்து 96 பவுன் நகைகளையும் எடுத்துச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மதன்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ராம நாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுகுறித்து நடந்த விசாரணையில் மேற்கண்ட அட்சயா 2 பெண்கள் உள்பட சிலரின் தூண்டுதலின்பேரில் வீட்டில் இருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான 181 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மாயமானது தெரியவந்தது.
உத்தரவு
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபாண்டியன், கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த விசாரணையில் அட்சயா கேரளா மாநிலத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படையினர் நேற்று முன்தினம் கேரளா சென்று திருவனந்தபுரம் பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த அட்சயாவை கைது செய்தனர்.
விசாரணை
அவரை ராமநாதபுரம் அழைத்து வந்து நடந்த சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அட்சயாவை நீதிபதி அடுத்த மாதம் 3-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்படி அட்சயா நிலக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நகைகளை மீட்கவும் இதில் தொடர்புடைய சிலரை கைது செய்யவும் மீண்டும் கேரளா விரைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் தனது பெற்றோர் மற்றும் கணவர் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான நகைகளை எடுத்துக்கொண்டு மாயமான பெண்ணை போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகைகளை மீட்டு மீதம் உள்ளவர்களை கைது செய்தால்தான் இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? அட்சயாவை ஏமாற்றி இவ்வாறு நகைகளுடன் அழைத்து சென்ற 2 பெண்கள் உள்ளிட்ட நபர்கள் யார் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story