இணையவழியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இணையவழியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.
தர்மபுரி,
பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி இணையவழியில் வந்த கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்தார். ஜமாபந்தியில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி முகாம்கள் நடைபெற்று வருகின்றனர். இந்த முகாம்களில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் இணையவழியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான முகவரி, தொலைபேசி எண்கள் இல்லாத மனுக்களை ஆய்வு மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பாலக்கோடு தாலுகாவில் உள்ள கிராமங்களின் 13 கிராம கணக்கு பதிவேடுகளான எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல், 1 - ஏ உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா அடங்கல், பண வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பயிற்சி உதவி கலெக்டர் கவுரவ்குமார், பயிற்சி துணை கலெக்டர் பூமா, தாசில்தார்கள் அசோக்குமார், அன்பு, வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story