அஞ்செட்டி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தையல் தொழிலாளியை வெட்டிக்கொல்ல முயற்சி-மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

அஞ்செட்டி அருகே கள்ளக்காதலை கண்டித்த தையல் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
தையல் தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பேல்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). தையல் தொழிலாளி. இவரது மனைவி கங்கம்மா (40). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி 2 பேரும் பிரிந்தனர். அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
கங்கம்மா பெங்களூரு ஒசா ரோட்டில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கும், அஞ்செட்டி பேல்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ரவி (48) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து ரவி பெங்களூரு ஒசா ரோட்டில் வசித்து தனது கள்ளக்காதலை வளர்த்து வந்தார். இது சிவக்குமாருக்கு தெரியவந்தது.
கொலை செய்ய திட்டம்
பின்னர் அவர் கங்கம்மா வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தார். மேலும் அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு கங்கம்மா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு குறித்து கங்கம்மா தனது கள்ளக்காதலன் ரவியிடம் தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ரவி, சிவக்குமாரை கொலை செய்ய திட்டம் போட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை ரவி மற்றும் இவருடைய கூட்டாளிகள் 3 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் பேல்பட்டிக்கு வந்தனர். கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் சிவக்குமாரை அவரது வீடு அருகே சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு கை, கால் உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்தது.
தப்பி சென்றனர்
சிவக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்த ரவி உள்ளிட்ட 4 பேர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சிவக்குமாரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளத்தொடர்பு காரணமாக ரவி உள்பட 4 பேர் தன்னை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி சென்ற ரவி உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். அஞ்செட்டி அருகே கள்ளக்காதலை கண்டித்த தையல் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story






