பாலக்கோடு பகுதியில் விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே அழுகும் தக்காளி


பாலக்கோடு பகுதியில் விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே அழுகும் தக்காளி
x
தினத்தந்தி 20 Jun 2021 11:28 PM IST (Updated: 20 Jun 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு பகுதியில் விலை வீழ்ச்சியால் தக்காளி செடிகளிலேயே அழுகி வருகிறது.

பாலக்கோடு:
தக்காளி சாகுபடி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, பேகாரஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்த தக்காளிகளை அறுவடை செய்து பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
வியாபாரிகள் தக்காளியை வாங்கி ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. போதிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். 
விவசாயிகள் கோரிக்கை
மேலும் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டுள்ளனர். இதனால் தக்காளி செடிகளிலேயே அழுகி காய்ந்து வருகிறது. பலர் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர். எனவே பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள தக்காளி குளிரூட்டும் மையத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடவேண்டும். தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story