வந்தவாசி அருகே கார் டிரைவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.14 ஆயிரம் மோசடி
வந்தவாசி அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவதாகக்கூறி கார் டிரைவர் கார்டை பயன்படுத்தி ரூ.14 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி-
பணம் எடுக்க சென்றார்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கடந்த 7-ந் தேதி அன்று சாத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பீமன் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த நபர் பணம் எடுத்துத் தருவதாக கூறி உள்ளார். அவரை நம்பிய பீமன் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.
அந்த வாலிபர் கார்டை பயன்படுத்தி பணம் வரவில்லை என கூறி, தான் ஏற்கனவே வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை பீமனிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்டு அவர் சென்றுவிட்டார்.
ரூ.14 ஆயிரம் மோசடி
அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் வந்தவாசிக்கு சென்று பீமனின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.14 ஆயிரத்து 100 எடுத்துள்ளார்.
இது பீமனின் செல்போனுக்கு குறுந்தகவலாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வடவணக்கம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில் நேற்று வல்லம் கூட்ரோட்டில் வடவணக்கம்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தை சேர்ந்த ரகுராமன் மகன் விஜயன் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் டிரைவர் பீமன் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்ததை ஒப்பு கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.14,100, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story