ஆழியாறு அணையில் மீன் பிடிக்கும் தொழில் பாதிப்பு


ஆழியாறு அணையில் மீன் பிடிக்கும் தொழில் பாதிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 12:03 AM IST (Updated: 21 Jun 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பாததால் ஆழியாறு அணையில் மீன் பிடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பாததால் ஆழியாறு அணையில் மீன் பிடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.  

ஆழியாறு அணை

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்து உள்ளது ஆழியாறு அணை. இந்த அணை மூலம் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 

இதை தவிர அணையில் குத்தகை அடிப்படையில் மீன்கள் பிடிக்கப் படுகின்றன. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அங்கேயே விற்பனை செய்யப் படுகிறது.

அதுபோன்று பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பி வராததால் மீன் பிடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் குறைவான மீன்கள் கிடைப்பதால் பொள்ளாச்சியில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு ஆழியாறு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். 

இதுகுறித்து அணையில் மீன்பிடிப்பவர்கள் கூறியதாவது:-

தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆழியாறு அணையில் இருந்து கட்லா, ரோகு, சிலேபி, மிருகால் உள்ளிட்ட மீன் வகைகள் பிடித்து விற்பனை செய்யப்படுகிறது. பலத்த மழை, புயல் காலங்கள் தவிர ஆண்டு முழுவதும் மீன்கள் பிடிக்கப் படுகின்றன. 

இங்கு மீன்பிடிக்கும் பணியில் கோபி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் இன்னும் திரும்பவில்லை.

 இதனால் இங்கு தற்போது 4 பேர் மட்டுமே மீன் பிடிக்கின்றனர். இதன் காரணமாக அணையில் மீன் பிடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

 வழக்கமாக 150 கிலோ முதல் 200 கிலோ வரை மீன்கள் கிடைக்கும். தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக 25 கிலோ முதல் 30 கிலோ வரை மீன்கள் மட்டுமே கிடைக்கின்றன. இதனால் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. 

பொதுமக்கள் ஏமாற்றம் 

இதன் காரணமாக இங்கு மீன்வாங்க வரும்  பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் வந்தால் மட்டுமே மீன்கள் அதிகமாக பிடிக்க முடியும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story