பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்


பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 21 Jun 2021 2:34 AM IST (Updated: 21 Jun 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்படாதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர்:

அனைவரும் எதிர்பார்த்தனர்
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பஸ்கள் ஓடவில்லை. பின்னர் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கினால், முன்னதாக 22, 23-ந்தேதிகளில் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு பஸ்கள் இயக்கப்படவில்லை.
முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தமிழகத்தில் இன்றுடன் (திங்கட்கிழமை) ஊரடங்கு முடிவடைய இருந்தது. மேலும் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் பஸ்களை 50 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.
பஸ்கள் இயக்க அனுமதியில்லை
அதற்கு ஏற்ப பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில் சுத்தம் செய்யும் பணியிலும், கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும், குறைபாடுகள் உள்ள பஸ்களை கண்டறிந்து, அதனை சரி செய்யும் பணியிலும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் தயார் நிலையில் அரசின் அறிவிப்புக்காக காத்திருப்பது போல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வருகிற 28-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்தது. அதில் கொரோனா அதிகம் பாதித்த 11 மாவட்டங்கள் முதல் வகையிலும், அடுத்த 23 மாவட்டங்கள் 2 -வது வகையிலும், மீதமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் 3-வது வகையிலும் இடம் பெற்றிருந்தன. இதில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்கள் 2-வது வகையில் இடம் பெற்றுள்ளது. 2-வது வகையில் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
தொடர்ந்து ஓய்வெடுக்க....
இதனால் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பஸ்கள் தொடர்ந்து ஓய்வெடுக்க தொடங்கி விட்டன. 3-வது வகையில் உள்ள மாவட்டங்களில் மட்டும் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்திலேயே தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் குறைவாக எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள வேலூரை அடுத்து பெரம்பலூர் 2-வது இடத்திலும், அரியலூர் 3-வது இடத்திலும் உள்ளது.
ஆனாலும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளிக்காதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களில் பலர் அருகே உள்ள மாவட்டங்களிலும், மாவட்ட தலைநகரிலும் வேலை பார்த்து வருகின்றனர். ஏற்கனவே பஸ்கள் இயக்கப்படாததால் இ-பதிவு பெற்று இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.99-ஐ தாண்டி விற்கப்படுகிறது. இதனால் கிடைக்கும் ஊதியத்தில் பாதி பெட்ரோல் செலவுக்கு போய்விடுகிறது என்று புலம்பி வந்தனர்.
மேலும் ஊரடங்கை நீட்டித்தாலும் பரவாயில்லை. பஸ்களை இயக்க அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்த்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 23 மாவட்டங்களிலும் விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகளுடன் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story