மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அரசு உதவித்தொகை


மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அரசு உதவித்தொகை
x
தினத்தந்தி 21 Jun 2021 1:25 AM GMT (Updated: 21 Jun 2021 1:25 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் மண்டபத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூஜாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவி தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி போன்ற பகுதிகளை சேர்ந்த கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என மொத்தம் 165 பேருக்கு உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 395 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூஜாரிகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

3-வது அலை

தமிழக முதல்-அமைச்சர் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்டத்திலும் மேற்கொண்ட சீரிய முயற்சியின் காரணமாக நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று முதல்-அமைச்சரின் பெரு முயற்சி காரணமாக கட்டுக்குள் உள்ளது. இதனை முழுவதுமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவின் மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி ராஜேந்திரன், சந்திரன், வேலூர் மண்டல இணை ஆணையர் கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி, தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் திராவிட பக்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story