முன்விரோதத்தில் அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து; 7 பேர் மீது வழக்கு


முன்விரோதத்தில் அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து; 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Jun 2021 11:08 AM GMT (Updated: 2021-06-21T16:38:04+05:30)

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் சேகரன் (வயது 58). நேற்று முன்தினம் சேகரன் தனது சகோதரரான சுதாகரன் (55) என்பவருடன் தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், சீனிவாசன், பிரவீன்குமார், பிரதீப்குமார், பிரசாந்த், ஜமுனா, கோகிலா ஆகிய 7 பேரும் முன்விரோதத்தில் சகோதரர்கள் 2 பேரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதில் காயம் அடைந்த 2 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடந்த சம்பவம் குறித்து சேகரன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக சுரேஷ், சீனிவாசன், பிரவீன்குமார், பிரதீப்குமார், பிரசாந்த், ஜமுனா, கோகிலா ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதே போல், திருவள்ளூரை அடுத்த மப்பேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதீப் (19). நேற்று முன்தினம் பிரதீப் அதே கிராமத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவரது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை மனதில் வைத்துக் கொண்டு அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மணிகண்டன், அருண்பாண்டி, ஜெயப்பிரகாஷ், ரவி, ஸ்டெல்லா ஆகிய 6 பேரும் பிரதீப்பை வழிமறித்து அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர்.இதில் காயமடைந்த பிரதீப் தண்டலம் பகுதியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கப்பதிவு செய்து ராஜேந்திரன், மணிகண்டன், அருண்பாண்டி, ஜெயபிரகாஷ், ரவி, ஸ்டெல்லா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story